Pages

Thursday, January 16, 2014

கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி?- மாவட்ட வாரியாக கணக்கெடுக்க முடிவு

கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.
தமிழகத்தில் தகுதித்தேர்வை நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90 மார்க்) எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இந்த தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்கூட, மதிப்பெண்ணை உயர்த்துவதற்காக மீண்டும் தேர்வு எழுதலாம்.

29,600 பேர் தேர்ச்சி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சேர்த்து 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். ஏற்கெனவே வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 12,596 பேரும், கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வின் திருத்தப்பட்ட முடிவின்படி 17 ஆயிரம் பேரும் ஆக மொத்தம் சுமார் 29,600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பி.எட். மாணவர்களை படிக்கும்போதே தகுதித்தேர்வுக்கு தயார்படுத்துவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கடந்த ஆண்டு பி.எட். பாடத்திட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் சேர்க்கப்பட்டது.

கணக்கெடுக்க முடிவு
தற்போது வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-2) சுமார் 17 ஆயிரம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பி.எட். படிப்பில் கடந்த ஆண்டு தகுதித்தேர்வு பாடத்திட்டத்தை சேர்த்தது எந்த அளவுக்கு பயன் அளித்திருக்கும் என்பதை ஆராய ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2-ல் தேர்ச்சி பெற்றவர்களில் எத்தனை பேர் கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்கள் என்பதை மாவட்ட வாரியாக கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் உதவி கோரப்படும் என்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன், ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.