Pages

Wednesday, January 29, 2014

ஒரு மாணவி; இரு ஆசிரியர்: இப்படியும் இயங்குது பள்ளி

ஒரு மாணவியுடன் இயங்கி வருகிறது விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி. இதற்கு இரண்டு ஆசிரியர்கள் வேறு பணியில் உள்ளனர்.


பட்டமங்களத்தில் 1962 முதல் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இதன் மூலம் பட்டமங்களம் மட்டுமன்றி முள்ளிக்குடி, புத்தனேந்தல் கிராம மாணவர்களும் பயன் பெற்று வந்தனர். 2008--09 கல்வியாண்டு வரை ஓரளவு எண்ணிக்கையில் மாணவர்கள் படித்து வந்தனர்.

விவசாயம் பொய்த்துப் போன நிலையில் பட்டமங்களத்தில் உள்ள 50 குடும்பங்கள் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தது. இதனால், இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதன்பின், 2010--11 கல்வியாண்டில் 10 , 2011--12 ல்5 , 2012--13 ல் இரண்டு என குறைந்து, தற்போதைய 2013--14 கல்வி ஆண்டில் ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி பெயர் பாதம்பிரியா.

இதில் ஆச்சரியம் என்னவெனில் ஒரு மாணவி கல்வி பயிலும் பள்ளிக்கு தலைமையாசிரியர் உதவியாசிரியர் என இரு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

பட்டமங்களம் பூமிநாதன், "இந்தப் பள்ளியில் ஒரு மாணவி படித்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக குழந்தைகள் படிக்க வருவர். குழந்தைகள் இல்லையென பள்ளியை மூடி விட்டால் பள்ளி வயதில் இருக்கிற குழந்தைகள் படிப்பதில் சிரமம். நான்கு கி.மீ., தொலைவிலுள்ள டி.வேலாங்குடி பள்ளிக்குதான் குழந்தைகள் படிக்க செல்லும் நிலை ஏற்பட்டுவிடும். குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர முடியாது. பள்ளி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும்" என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், "பட்டமங்களம் பள்ளியில் பணி புரியும் இரு ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணிய புரிய அனுப்பி உள்ளோம். தற்போது படிக்கும் மாணவியின் கல்வி நலன் கருதி அவருக்கு தொடர்ந்து பாடம் எடுக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுவாமிநாதன், "இந்தப் பள்ளி உள்ள கிராம பகுதிகளில் பள்ளி வயது குழந்தைகள் இல்லை. தற்போது படிக்க வரும் இந்த ஒரு மாணவிக்கு முழுமையான கல்வி கிடைக்க வேண்டும். பள்ளியை மூடி விட்டால் அந்தக் குழந்தையின் கல்வி கேள்விக்குறியாகி விடும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.