Pages

Wednesday, January 1, 2014

பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம்: கோவையில் முன்னோட்ட பணி

மாநிலம் முழுவதும் இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் குறித்த முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம், அறிவுசார் பள்ளிகள், இ.ஐ.எம்.எஸ்., கணினி உதவியுடன் கற்பதற்கான மொழி ஆய்வகங்கள், இணையதள வழி கண்காணிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ( கனெக்டிங் கிளாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 160 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளிலும், 128 நடுநிலை பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில், இத்திட்டத்தை செயல்படுத்த ஐந்து குழுக்கள் நிர்வாக அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சிகளை கோவை, திருச்சி, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நான்கு மண்டலங்களாக பிரித்து வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இப்பயிற்சி மற்றும் முன்னோட்ட பணிகளுக்கான பரிசோதனை நடந்தது. முன்னோட்ட பணிகளுக்காக நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில், இத்திட்டத்திற்காக தேர்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் 174 பேர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டத்தில் தேர்வு பெற்ற கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை இணையதளம் மூலம் ஒருங்கிணைத்து பரிசோதனை செய்யப்பட்டதுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "இத்திட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்தப்படுவதுடன் ஆசிரியர்களின் கற்பிக்கும் தரமும் மேம்படுத்தப்படும். இதற்கான முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் தமிழக முதல்வர் அதிகார பூர்வமாக துவக்கி வைப்பார்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.