Pages

Thursday, January 30, 2014

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்

அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்காக 14 சிறப்பு குழுக்களை அமைத்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


அரசு பணிகளில் ஒருவர் சேர்ந்ததும் அவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட துறைகள், "சான்றிதழ்கள் உண்மையானது தான்" என அத்தாட்சி கொடுத்த பின் தான், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், பணி நிரந்தரம் செய்யப்படுவார். அந்த வகையில், அரசு பணியில் சேரும் அனைத்து வகை ஊழியர்களின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, ஆசிரியர் கல்வி டிப்ளமோ ஆகிய சான்றிதழ்கள், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும். இவற்றை சரிபார்த்து உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதில், தேக்கநிலை இருந்து வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஊழியர், ஆசிரியர், பணி நிரந்தரம் செய்யப்படுவது, தள்ளிப் போகிறது.

இந்த பிரச்னையைத் தீர்க்க, 14 சிறப்பு குழுக்களை, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் நியமித்து உள்ளார். பிளஸ் 2 தனித் தேர்வுப் பணிகளை, தேர்வுத்துறை இயக்குனரக ஊழியர்கள் பார்த்து வந்தனர். பல பணிகள் கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்வதால் பணிப்பளு சற்று குறைந்துள்ளது. இதனால் பிளஸ் 2 பணியை, சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திடம் ஒப்படைத்துவிட்டு, இயக்குனரக ஊழியர்களைக் கொண்டு சிறப்பு குழுக்களை இயக்குனர் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு பிரிவிலும், மூன்று பேர் இருப்பர். தேங்கியுள்ள சான்றிதழ்கள், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.