Pages

Thursday, December 19, 2013

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு

பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தை குறைக்க, ஆசிரியர்களுக்கு  சிறப்பு, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.


பள்ளிக்கல்வித் துறையின், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் சார்பில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுக்கான, ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. காலாண்டு தேர்வு முடிந்து, அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, கல்வித்துறை சார்பில், தேர்வர்களின் ஆள்மாறட்டத்தை தடுக்க, தேர்வுக்கு முன்பாக, தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வு மைய அனுமதிச் சான்று, வருகைச் சான்று, ஃபோட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று, இருப்பரிமாண பட்டக் குறியீடு, கூடுதல் ரகசிய குறியீடுடன் சான்றுகள் வழங்குவதற்கான பணிகளும் நடக்கிறது.

அதற்காக, தேர்வரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி, முகவரி, மதம், மாற்றுத்திறனாளியா, பெற்றோர் பெயர், மொபைல் ஃபோன் எண், படிப்பு குரூப், பாடங்கள் ஆகியவை உறுதிமொழி சான்று விபரங்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து, தேர்வுத்துறைக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடக்கிறது.

நடப்பாண்டுக்கான பாடத்திட்டங்கள் முடிவுற்ற நிலையில், வரும் நாட்களில், பள்ளிகள் அளவிலான வகுப்புத் தேர்வு நடக்கவுள்ளது. பெற்றோர்களும் பொதுத்தேர்வு எழுதவுள்ள தங்களது மாணவர்களை, தயார்படுத்தி வருகின்றனர். அந்த நேரத்தில், மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் நெருக்கடியால், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாணவர்களிடையே, தேர்வை சந்திப்பதற்கான தேர்வு பயமும் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை களைய, ஆசிரியர்களுக்கு மனித வளப் பயிற்சியை வழங்குவதற்கான பணிகளை, கல்வித்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர். முதல்கட்டமாக மாணவர்களுக்காக, ஆசிரியர்களுக்கு, "கவுன்சலிங்" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, "கவுன்சலிங்&' இன்று ராசிபுரம் அடுத்த பாவை இன்ஜினியரிங் கல்லூரியில், பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தி வரும், 1,200 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தஞ்சாவூரைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டு ஆலோசகர் ராமன் மூலமாக, பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவர். பொதுத்தேர்வை மாணவர்களை எவ்வித பயத்துடன் அணுகாமல் இருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், ஆசிரியருக்கு பயற்சி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.