Pages

Friday, December 27, 2013

தூத்துக்குடியில் வ.உ.சி., கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி., கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி கல்லூரியை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.


தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் வ.உ.சி., கல்லூரி உள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்கு வேதியியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் முத்து மாரியப்பன், 48. இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.

கல்லூரியின் வாயில் முன் காலை 9 மணிக்கு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மாணவிகள் தரப்பில் தெரிவித்ததாவது: வேதியியல் துறையில் பணியாற்றும் முத்து மாரியப்பன் பாலியல் தொந்தரவுகள் செய்தும், ஆபாசமாக பேசி வருகிறார். இதுகுறித்து பலமுறை கல்லூரி முதல்வர் வீரபாகு, வேதியியல் துறைத் தலைவரிடம் புகார்கள் தெரிவித்தோம். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் தொடரும், என தெரிவித்தனர்.

சமரச பேச்சுவார்த்தை: போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் பலன் ஏற்படவில்லை. கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம் மாணவர்களிடையே சமரசம் பேசி வருகிறார். மாணவர்கள் சார்பில் நீதிபதி வர்மா குழு பரிந்துரைப்படி ஆசிரியர்கள், பெற்றோர்கள் இருபாலர் நட்புறவு குழு அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.

சமரச பேச்சில் ஈடுபட்ட, தாசில்தார் ஆழ்வார், "குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மாலை 4.15 க்கு கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.