Pages

Saturday, December 21, 2013

மாணவர்களே இல்லாத ஒன்றிய பள்ளி: தலைமை ஆசிரியை மட்டுமே வரும் அவலம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளைய அருகே உள்ள ஒன்றிய துவக்க பள்ளி, ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படுகிறது. தலைமை ஆசிரியை மட்டும் பணிக்கு வந்து செல்கிறார். ராஜபாளையம்-சத்திரப்பட்டிரோட்டில் உள்ள மில்கிருஷ்ணாபுரம் ஒன்றிய துவக்க பள்ளி, 1957ல் துவக்கப்பட்டது.
இப்பள்ளியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 90 மாணவர்கள் படித்தனர். இக்கிராமத்தை சுற்றி பல தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டதால், மாணவர்கள் அப்பள்ளிகளுக்கும், ராஜபாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மாறினர். இதனால், 2005 ல், மில்கிருஷ்ணாபுரம் ஒன்றிய துவக்க பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆக குறைந்தது. தலைமை ஆசிரியை, ஆசிரியை, இளநிலை உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியில் இருந்தனர். கடந்த கல்வி ஆண்டில், இருவர் மட்டுமே படித்தனர். இதனால், இருந்த ஒரு ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். இளநிலை உதவியாளர் மாற்றுபணிக்கு சென்று விட்டார். சில நாட்களுக்கு பின், ஒரு மாணவி வேறு பள்ளிக்கு மாறினார். இந்த கல்வி ஆண்டில், ஒரு மாணவர் மட்டுமே, படிப்பை தொடர்ந்தார். இங்கு பணியாற்றிய சத்துணவு ஊழியர்களும் இடம் மாற்றப்பட்டனர். இதனிடையே, கடந்த அக்டோபரில், இப்பள்ளியில் படித்த ஒரே மாணவரும், வேறொரு பள்ளிக்கு மாறி விட்டார். தற்போது, தலைமை ஆசிரியை ராஜலட்சுமி மட்டுமே, பள்ளிக்கு தினமும் வந்து செல்கிறார். இதை, கல்வி அதிகாரிகளும், ஊர் மக்களும் கண்டுகொள்ளவில்லை. நாகஜோதி பி.டி.ஓ., கூறுகையில் ""பள்ளியில் ஒரு மாணவன் மட்டும் படிப்பது குறித்து, தகவல் கிடைத்து, அங்கு சென்று பார்வையிட்டேன். அங்கு சத்துணவு நிறுத்தப்பட்டுள்ளது,'' என்றார். உதவிகல்வி அதிகாரி முத்துராமலிங்கம், ""பள்ளி குறித்த அறிக்கையை, இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம். . கிராம கல்விக்குழு மூலம் பேசினோம், வரும் ஆண்டில், மாணவர்களை சேர்ப்பதாக, உறுதி அளித்துள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.