"டி.ஆர்.பி., மதிப்பெண்ணுக்கு ஆசிரியப் பணி அனுபவத்தை முழுமையாக கணக்கிட வேண்டும்" என, தமிழ்நாடு சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தலைவர் அற்புதராஜ், செயலாளர் நடராஜன் கூறியதாவது: "ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) சமீபத்திய குளறுபடியால் படித்த, தகுதியான அனுபவம் வாய்ந்த கல்லூரி ஆசிரியர்களின் எதிர்காலம் பாழாகிறது.
ஆசிரியப் பணியின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்திற்கும் 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக ஏழரை ஆண்டுகளுக்கு 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. 2007 மற்றும் 2010ல் உதவி பேராசிரியர் நியமனத்தில் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. தற்போது விதியை மாற்றியுள்ளனர்.
உதாரணமாக ஒருவர் 15 ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தாலும், நான்காண்டுகளுக்கு முன் "பி.எச்டி." முடித்தால் அந்த ஆண்டிலிருந்து தான் ஆசிரியப் பணிக்கான அனுபவத்தை கணக்கிட்டு மதிப்பெண் வழங்குகின்றனர். அரசு வேலை கிடைக்குமென நம்பி, சுயநிதிக் கல்லூரிகளில் அனுபவத்திற்காக பணிபுரிபவர்கள் பாதிக்கப்படுவர்.
நவ., 25 முதல் இரண்டு கட்டங்களாக மூன்று கல்லூரிகளில் 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மூலம் சான்றளிக்கப்பட்ட பணி அனுபவத்தை கணக்கில் கொள்ளாமல், புதிய முறையை பயன்படுத்துகின்றனர்.
இதனால் விண்ணப்பித்த 17ஆயிரம் பேரில் 80 சதவீதம் பேருக்கு உரிய மதிப்பெண் கிடைக்கவில்லை. பணி அனுபவத்தை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள டி.ஆர்.பி.,க்கு, அரசு வழிகாட்ட வேண்டும்," என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.