"கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தால், இளைஞர்களை நாம் முன்னேற்ற முடியும்" என கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு ராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 21வது மாநாடு கடந்த 27ம் தேதி முதல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடந்த சாரதா தேவியார் விழாவில், மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் மாணிக்கம் வரவேற்றார். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார்.
"இந்திய இளைஞர்களின் எழுச்சிக்கான அறைகூவல்" என்ற தலைப்பில், கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:
ஜனநாயகம், கல்வி, ஆன்மிகம், அனைத்து சமுதாய முன்னேற்றத்திலும் நாம் முதலில் உயர வேண்டும். பிறகு நம்மை உயர்த்திய சமுதாயத்தை உயர்த்த வேண்டும். இந்திய நாட்டு இளைஞர்களுக்கு இணையான இளைஞர்கள் எந்த நாட்டிலும் இல்லை.
கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தால், இளைஞர்களை நாம் முன்னேற்ற முடியும். ஆன்மிகத்தின் மூலம் தடைகளை நீக்க வேண்டும். தன்னைத் தான் அறிந்து கொள்வது ஆன்மிகம். மனிதன் அன்றாடம் கண்டு வரும் தடைகளுக்கு வழி கண்டு தருவதே ஆன்மிகம். கடவுளைத்தேடி அலையாதீர்கள்; மனிதனுக்குள் இருக்கும் கடவுளை காணுங்கள். விவேகானந்தர் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட உலகிற்கே பொதுவானவர்.
பக்தி என்பது ஒரு மார்க்கம்; இலக்கு அல்ல. இலக்கை அடைய துறவும்,தொண்டும் வேண்டும். தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை அறிந்தால் இறைவனை அறியலாம். எடுக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்தால் எஞ்சியுள்ள வாழ்க்கை சிறக்கும். புறத்திலே சுகம் இல்லையெனில் அகத்தை சுகமாக வைத்திருந்தால் வாழ்வு சிறக்கும். வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்; ஆன்ம விடுதலை ஒன்றே நம் இளைஞர்களின் லட்சியமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.