Pages

Thursday, December 19, 2013

சைபர் குற்றங்கள் தடுப்பு பாடப்பிரிவு அமல்படுத்த வலியுறுத்தல்

"சைபர் குற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்த, பள்ளிகளில் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த பாடப்பிரிவுகளை அமல்படுத்துவது அவசியம்" என தமிழக உளவுத்துறை ஐ.ஜி., அம்ரேஷ் புஜாரி பேசினார்.


இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில், "தகவல் பாதுகாப்பு மூலம், தொழில் திறனை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கு, கோவையில் நடந்தது. ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளின், ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினெட் ஜெனரல், பிள்ளை கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

இதில் உளவுத்துறை ஐ.ஜி., அம்ரேஷ் புஜாரி பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள், அதிகளவில் மேற்கொள்ளப்படவில்லை. நம் நாட்டில், சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து தொழில்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் சவாலாக விளங்குகிறது. 2001ல், "தகவல் தொழில்நுட்ப சட்டம்" கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய சட்டங்களை இயற்றி  நடைமுறைப்படுத்தினால் மட்டுமே சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த, அமெரிக்க நாட்டில், "இணையதள சைபர் கிரைம் சென்டர்" பிரிவு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை விரைவில் பிடிக்க முடிகிறது. அதுபோன்று, நம் நாட்டிலும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த தனி பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும். காவல் துறையில் சைபர் பாதுகாப்பு பிரிவு உருவாக்க வேண்டும்.

வருங்காலத்தில் பள்ளி பாடத் திட்டங்களில், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த, பாடப்பிரிவுகளை கொண்டு வர வேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில், நம் நாட்டில், ஏற்படும் சைபர் குற்றம் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.