Pages

Wednesday, December 25, 2013

ஆசிரியர், அங்கன்வாடி அமைப்பாளருக்கிடையே மோதல்: பள்ளியை பூட்டியதால் வெளியே தவித்த குழந்தைகள்

சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாசரேத்தை சேர்ந்த அன்பாய் செல்வம் தலைமை ஆசிரியையாக உள்ளார். உதவி ஆசிரியராக அவரது கணவர் பிரபாகரன் மோசஸ் பணி புரிந்து வருகிறார்.
இந்த பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில் சரஸ்வதி என்பவர் அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.   இந்த வளாக கதவுக்குரிய பூட்டின் ஒரு சாவி பள்ளி தலைமை ஆசிரியையிடமும், மற்றொரு சாவி அங்கன்வாடி அமைப்பாளரிடமும் இருக்கும். தலைமை ஆசிரியருக்கும் அங்கன்வாடி அமைப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு பள்ளிக்கு நேற்று முதல் விடுமுறை விடப்பட்டது.  இதையடுத்து ஆசிரியர் வேறு பூட்டை போட்டு பள்ளி வளாகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கன்வாடி மையத்துக்கு விடுமுறை இல்லாததால் அதன் அமைப்பாளர் நேற்று காலையில் வழக்கம்போல் கேட்டை திறக்க வந்தார். வேறு பூட்டு போடப்பட்டிருப்பதை பார்த்த அவரும், அங்கன்வாடி குழந்தைகள் 10 பேரும் பள்ளி வளாகத்துக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.  இதுகுறித்து பிடானேரி ஊராட்சி தலைவர் சரோஜினிதேவியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் தலைமை ஆசிரியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் சாவியை கொடுக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, அவ்வமைப்பின் வட்டச் செயலர் செங்கோல்மணி, வட்ட அமைப்பாளர் பொன்ராஜ், பாண்டியன் மற்றும் கிராம மக்கள் பள்ளி முன் திரண்டனர்.  பள்ளி கேட் முன் தற்காலிக அடுப்பு அமைத்து சமையல் செய்து பிற்பகல் 2.30 மணியளவில் குழந்தைகளுக்கு உணவு வழங்கினர். வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு சாப்பிடும் குழந்தைகள் சுமார் 2 மணி நேரம் பசியால் தவிக்க நேரிட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் ஜெ.அகிலா, கிராம நிர்வாக அலுவலர் ராஜி, வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர் சாரதா ஆகியோர் தலைமை ஆசிரியையிடம் தொலைபேசியிலேயே பேச்சு நடத்தினர்.  ஆனால் அவர் பூட்டு சாவியை வழங்க மறுத்துவிட்டாராம். இதனால் கிராம மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். உடனே, அதிகாரிகள் மீண்டும் தலைமை ஆசிரியையிடம் பேசினர்.  பின்னர் சாவியை வட்டார குழந்தைகள் திட்ட அலுவலரிடம் தலைமை ஆசிரியை ஒப்படைத்தார்.  இதுகுறித்து மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க வட்ட செயலர் செங்கோல்மணி கூறுகையில், இப்பள்ளியில் தம்பதியரே ஆசிரியர்களாக வேலை பார்த்து வருவதால் சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளரிடம் கருத்து வேறுபாடு உருவாகி பிரச்சினை ஏற்படுகிறது.  எனவே கல்வி அதிகாரிகள் இதில் தலையிட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.