கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டுவர, கொம்யூன் வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானங்கள் அமைக்க அரசு முன்வர வேண்டும். மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக உள்ளது விளையாட்டு. மேலும், உடல் நலம், மன நலம், சமுதாய நலத்திற்கும் விளையாட்டு அவசியம்.
புதுச்சேரி மாநிலத்தில் 746 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் என 150க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படிப்பில் ஜொலிக்கும் அளவிற்கு விளையாட்டில் சாதனை படைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதே மாணவர்களின் ஆர்வ குறைவுக்கு முக்கிய காரணம். குறிப்பாக, கிராம பகுதி மாணவர்களுக்கு முற்றிலுமாக வாய்ப்பு கிடைக்காமல், விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் முடங்கியுள்ளனர்.
புதுச்சேரி கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் விஸ்தாரமாக இருந்த விளையாட்டு மைதானங்களில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டதால் அதன் பரப்பு குறைந்துள்ளது. சில பள்ளிகளில், விளையாட்டு மைதானம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. நகர பகுதி மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சிபெற, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தடகளம் கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல விளையாட்டுக்கு பயிற்சி பெற வசதிகள் உள்ளது. ஆனால், கிராம பகுதிகளில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் இல்லை.
கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலம் அல்லது கோவிலுக்கு சொந்தமான பொது இடத்தில் கிராம இளைஞர்கள், மைதானத்தை தயார் செய்து கபடி, டென்னிஸ், வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி கல்லூரிகளிலும் வசதியில்லை, பொருளாதார நெருக்கடியால் விளையாட்டு உபகரணங்கள் வாங்க முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால், கிராம இளைஞர்களுக்கு திறமை இருந்தும் விளையாட்டில் ஜொலிக்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, கிராம பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வந்து, பல வெற்றிகள் பெறுவதற்கு வசதியாக, கொம்யூன் வாரியாக அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.