Pages

Saturday, December 21, 2013

ஆங்கில பொது தேர்வுக்கு விடுமுறை இல்லையா? மாணவர்கள் புகார்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால், பள்ளி கல்வித் துறைக்கு, மாணவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.


வரும், மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகளும், மார்ச் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடக்கின்றன. தேர்வின்போது, மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு வசதியாக இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் 6ல் நடைபெறும், பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாளுக்கும், அடுத்த நாள் நடைபெற உள்ள, இரண்டாம் தாளுக்கும் இடையில், விடுமுறை இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பியுள்ள புகார் மனு: தமிழ் இரண்டாம் தாள் எழுதி, நாங்கள் வீடுகளுக்கு சென்று சேர்வதற்கே, மாலை, 6:00 மணியாகி விடும். இந்நிலையில், பிற பாடங்களை காட்டிலும், ஆங்கிலம், புரிந்து கொள்ள கடினமானது. எனினும், தேர்வுக்கு காலஅவகாசம் வழங்கவில்லை. இதனால், தேர்வு எழுத சிரமம் ஏற்படும். இதற்கு பள்ளிக் கல்வித் துறை, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரசிபுரம் அரசு பள்ளி ஆசிரியர் பகத்சிங் கூறுகையில், ""பெரும்பாலும், அரசு பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில் தோல்வியடைவதால் தான், அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. இரண்டாம் தாள் தேர்வுக்கு முன், மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வது அவசியம். கடந்தாண்டில், அரசு பள்ளிகளில், ஆங்கில பாடத்தால் தான், தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பதை, நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

"தமிழ் முதல் தாள் தேர்வு, மார்ச் 3ல் நடக்கிறது. இரண்டாம் தாள் தேர்வு, 5ல் நடக்கிறது. இடையே, ஒரு நாள் விடுமுறை. தமிழ் பாடத்திற்கு அளிக்கும் விடுமுறையை, ஆங்கில தேர்வுகளுக்கு அளித்திருக்கலாமே' என, மாணவரும், ஆசிரியரும் ஆதங்கப்படுகின்றனர்.

தேர்வுத்துறை வட்டாரம் கூறியதாவது: தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், படிப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. எனவே, அன்றைய நாளில், ஆங்கிலம் தேர்வுக்கு தயாராகலாம். ஓராண்டு முழுவதும் படித்த மாணவர், கடைசியில், ஒரு நாள் இடைவெளி இருந்தால் தான், தேர்வுக்கு, தயாராக முடியும் என, கூறுவது, சரியா என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு நாள், தேர்வை தள்ளி வைத்தால், அப்படியே, மற்ற தேர்வுகளின் தேதியும் தள்ளிப் போகும். எனினும், மாணவர் கோரிக்கை, பரிசீலிக்கப்படும். இவ்வாறு தேர்வு வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.