Pages

Sunday, December 29, 2013

"படிப்பை கைவிட்டவர்களுக்கு வேலை தருகிறோம்"

வாழ்க்கையில் பல்வேறு காரணங்களால் படிப்பை இடையே விட்டவர்கள், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்கள் கொஞ்சம் உழைப்பையும், முயற்சியையும் முதலீடு செய்தால், பிரபல தனியார் நிறுவனங்களிலும் எளிமையாக வேலையில் சேரலாம் என உன்னதி அறக்கட்டளை வழிகாட்டி வருகிறது.


சென்னை, மேற்கு மாம்பலம், கே.ஆர்.கோவில் தெருவில் இயங்கி வரும் அறக்கட்டளை மேலாளர் பிரியதர்ஷினியிடம் பேசியதில் இருந்து...

"உன்னதி அறக்கட்டளை" பற்றி சொல்லுங்களேன்?

பெங்களூரில் உள்ள ஸ்ரீகுருவாயூரப்பன் பஜன் சமாஜ் டிரஸ்ட்டின் ஒரு பகுதி தான், "உன்னதி டிரஸ்ட்" இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளை உள்ளது. இதுவரை 2,000க்கும் மேற்பட்டோருக்கு, எங்களுடைய அமைப்பின் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம்.

இந்த அமைப்பின் நோக்கம் என்ன?

இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதார காரணங்களுக்காக படிப்பை பாதியில் கைவிட்டோர் அதிகம். அந்த இளைஞர்கள் சாதாரண கூலி வேலைகளில், சிக்கி சுழன்று துன்பப்பட்டு கொண்டிருக்கின்றனர். நம் நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியை ஒருமுகப்படுத்தி, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து, வேலைவாய்பபு, பொருளாதாரம் மட்டுமின்றி, அனைத்து வகையிலும் முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்.

இளைஞர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?

இங்குள்ள நிறுவனங்களில், வேலைக்கு தகுந்த நபர்கள் கிடைப்பதில் தான் சிக்கலே தவிர வேலை கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அதனால், இளைஞர்களுக்கு அடிப்படை ஆங்கிலம், கணினிப் பயிற்சி, ஆளுமைத்திறன், தொழில்நுட்பம், நல்லொழுக்கப் பயிற்சிகள் என மொத்தம் 70 நாட்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறோம். பாடமாகவும், நேரடியாகவும் நிறுவனங்களுக்கே சென்று களப் பயிற்சியையும் கற்றுத் தருகிறோம்.

பயிற்சி பெற்றோருக்கு எங்கெங்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன?

பெரிய ஜவுளி நிறுவனங்களில் விற்பனை பிரிவு, வாடிக்கையாளர் சேவை, நட்சத்திர உணவக விடுதிகளில் உணவக விருந்தோம்பல், அலுவலக உதவியாளர், கார் ஓட்டுனர், தொழிலகப் பணிகள், காவலாளி சேவை, பி.பி.ஓ., என பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, தற்போது பிரபல கடிகார நிறுவனத்தில் பணிபுரியவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. துவக்கத்தில், 8,000 ரூபாய் சம்பளம் உறுதி. அடுத்தடுத்து, அவரவர் திறமையை பொறுத்து முன்னேறிச் செல்லலாம்.

பயிற்சி பெறுவதற்கு தகுதிகள் நிர்ணயித்திருக்கிறீர்களா?

ஆம். 18 வயது நிரம்பிய, குறைந்த பட்சம் ஆறாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தவறிய மாணவர்கள் யார் வேண்டுமானாலும், எங்கள் அமைப்பை தொடர்பு கொள்ளலாம். தற்போது, 20க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அடுத்த குழுவிற்கான பயிற்சி விரைவில் துவங்கப்பட இருக்கிறது. 2020க்குள் 10 லட்சம் பேருக்கு, பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு: 94444 85241; www.unnatiblr.org

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.