Pages

Saturday, December 21, 2013

ஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்

சேலம் மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
ஒரே பள்ளியாக மாற்ற முயற்சி எடுக்கப்படாததால், ஆசிரியர் பணியிடமும், அதற்கான அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளாகியும் கண்டுகொள்ளாமல் இருக்கும், கல்வித்துறையின் நடவடிக்கை அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

சேலம் மாநகராட்சி பள்ளிகளில், இடிந்துவிழும் நிலையில் கட்டிடங்கள், போதிய பராமரிப்பின்மை, நிதி ஒதுக்கீடு இல்லாததால் நிர்வாகமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பரவலாக காணப்படுகிறது. தனியார் பிரைமரி, நர்சரி பள்ளிகளின் ஆதிக்கத்தால், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது.

கடந்த, 2010ம் ஆண்டு, வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த முராரி வரதய்யர் தெரு துவக்கப்பள்ளி, மாநகராட்சிக்கு சொந்தமான பரமகுடி நன்னுசாமி தெரு துவக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட துவங்கியது. அதே ஆண்டு, தீட்டுக்கல் தெரு நடுநிலைப்பள்ளியும் நிலப்பிரச்னையில் சிக்க, அப்பள்ளி மாணவர்களும், இதே வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இதே போல், பரமகுடி நன்னுசாமி தெருவில் இருந்த, இரண்டு அங்கன்வாடி மையங்களும், தீட்டுக்கல் தெருவில் இருந்த, இரண்டு அங்கன்வாடி மையங்களும் இந்த வளாகத்தில் செயல்பட தொடங்கியது.

ஒரே வளாகத்தில் செயல்பட்டாலும், தனித்தனி நிர்வாகமாக செயல்படுவதால், ஏராளமான உபரி பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், ஆண்டுக்கு, பல லட்ச ரூபாய் வரை அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.

உதாரணமாக இரு துவக்கப்பள்ளிகளிலும், தலா, 30 மாணவர்களே உள்ளனர். அரசு விதியின் படி, ஒரு பள்ளிக்கு, இரு ஆசிரியர்கள் கட்டாயம் என்பதால், ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர், ஒரு சத்துணவு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.

நடுநிலைப்பள்ளியிலும், 140க்கும் குறைவான மாணவர்களே உள்ள நிலையில், அதற்கும் தனியாக ஆசிரியர்கள், சத்துணவு ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் உள்ளன. மேலும் இவர்களுக்கு சத்துணவு தயாரிப்பது உள்பட அனைத்து பணிகளும் தனித்தனியே செய்யப்படுகிறது.

அனைத்து மாணவர்களும், ஒரே இடத்துக்கு வருவதால், துவக்கப்பள்ளிகள் இரண்டையும் கலைத்துவிட்டு, அப்பள்ளி மாணவர்களை நடுநிலைப்பள்ளியில் இணைப்பதால், பல அரசு பணியிடங்கள் தேவையற்றதாக மாறும். ஒரே வளாகத்தில் மூன்று பள்ளிகளும் செயல்பட தொடங்கி, மூன்றாண்டுகளாகியும், இவற்றை ஒரே பள்ளியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் எடுக்காமல் இருப்பது அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:
கிராமப்பகுதிகளில் பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இப்பள்ளியில் பல பணியிடங்கள் உபரியாக இருந்தும், அவற்றை பணிநிரவலில் மாறுதல் செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு உடனடியாக மூன்று பள்ளிகளையும் ஒரு பள்ளியாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்றாண்டுகளாகியும், அரசு அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை? இதனால், அரசு நிதி பல லட்ச ரூபாய் வரை வீணாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மனோகரன் கூறுகையில், ""அப்படியா? ஒரே வளாகத்தில் மூன்று பள்ளிகள் உள்ளதா? பொதுவாகவே அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது. இவற்றை சரி செய்வதற்கான ஆலோசனைகளை அரசு செய்து வருகிறது. அந்த நடவடிக்கை எடுக்கப்படும்போது, இதுவும் கவனத்தில் கொள்ளப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.