பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்" திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல், மன அழுத்தம், தேர்வு பயம், மாணவர், ஆசிரியர் உறவில் விரிசல் உட்பட பல்வேறு பிரச்னைகளை தடுக்க நடமாடும் கவுன்சிலிங் குழுவை அரசு ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் மனநல நிபுணர் தலைமையில் மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டத்தையும் 10 மண்டலமாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு குழுவினர் நேரடியாக அரசு பள்ளிகளுக்கு சென்று கவுன்சிலிங் வழங்கும் திட்டம் அக்.21ல் துவங்கியது.
குறிப்பாக உயர், மேல் நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படும் பள்ளிகளை சி.இ.ஓ.,க்கள் மூலம் கண்டறிந்து அந்த பள்ளிகளுக்கு இக்குழுவினர் நேரில் சென்று ஆலோசனை வழங்குவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 நாட்கள் வரை இந்த கவுன்சிலிங் நடக்கும். பாலியல் ரீதியாக வெளியே சொல்ல முடியாத சில தனிப்பட்ட பிரச்னைக்கு கூட இந்த கவுன்சிலிங் மூலம் தீர்வு கிடைக்கும். வேனில் பொருத்திய எல்.சி.டி., டி.வி., மூலம் செயல்விளக்க படக் காட்சிகளும் காண்பிக்கப்படும்.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கான "நடமாடும் கவுன்சிலிங்" குழு மனநல நிபுணர் நிர்மல்குமார் சிவகங்கையில் கூறியதாவது: "வளர் இளம் பருவ மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்னை, ஞாபகசக்தி, தேர்வு பயம், குடும்பம், சமூகம், பாலியல் ரீதியான பிரச்னைகள், உறவு முறையில் பாதிப்பு, நடத்தை பிரச்னை, போதை, தற்கொலை தடுப்பு, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இப்புதிய திட்டத்தை அரசு துவங்கியது.
பாலியல், மன ரீதியாக வெளியே சொல்ல முடியாத சில பிரச்னைக்கும் தீர்வு காணப்படும். பிரச்னையில் சிக்கிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க சி.இ.ஓ., டி.இ.ஓ., தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துகிறோம். தனியார் கல்வி நிறுவனங்களில் கவுன்சிலர்கள் இருப்பது போன்று, அரசு பள்ளிகளுக்கென கல்வி மாவட்டம் வாரியாக நிரந்தரமாக மனநல நிபுணரை நியமித்தால், பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களை காப்பாற்றலாம்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.