Pages

Friday, November 29, 2013

டி.டி., மருத்துவ கல்லூரியை அரசு எடுக்குமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும், டி.டி., மருத்துவக் கல்லூரியை, அரசு வசம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் - ஜெனரல் தெரிவித்தார்.


திருவள்ளூர் மாவட்டத்தில், டி.டி., மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்த நிலையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்லூரியில் மாணவர்களை சேர்த்தது. இதனால் மாணவர்களை தேர்வு எழுத, மருத்துவப் பல்கலைக்கழகம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கல்லூரியில் பிரச்னை எழுந்தது.

இந்நிலையில் டி.டி., மருத்துவக் கல்லூரியை, அரசே எடுத்துக் கொள்ள உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், கல்லூரி மாணவர்கள் நலச்சங்கம் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவை எதிர்த்து டி.டி., கல்லூரி நிர்வாகம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மாதம், 21ம் தேதி இறுதி விசாரணை நடந்தது.

கல்லூரி சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், மாணவர்கள் நலச்சங்கம் சார்பில், மூத்த வழக்கறிஞர், நளினி சிதம்பரம், அரசு தரப்பில், அட்வகேட் - ஜெனரல் சோமயாஜி, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை சார்பில், கூடுதல் அட்வகேட் - ஜெனரல், பி.எச்.அரவிந்த்பாண்டியன், மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், ராமன் ஆஜராகினர்.

விசாரணை முடிந்த பின், தேதி குறிப்பிடாமல் உத்தரவை நீதிபதி சசிதரன் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இம்மாதம் 25ம் தேதி, அட்வகேட் - ஜெனரல் ஆஜராகி, அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டார். இதையடுத்து இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

அட்வகேட் - ஜெனரல் சோமயாஜி நேற்று, கல்லூரியின் சொத்துகள் கடன் விவரங்களை தெரியப்படுத்தினால், டி.டி., கல்லூரியை அரசு எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்ய அரசு தயாராக உள்ளது; கல்லூரியை எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டால், கல்லூரியின் கடன் சுமை இல்லாமல் கல்லூரியை எடுக்க, அரசு தயாராக உள்ளது, என்றார்.

டி.டி., கல்லூரி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கல்லூரியை எடுத்துக் கொள்வது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது, என்றார். மாணவர்கள் சங்கம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தை அணுகும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில், மனு நிலுவையில் இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை, தாக்கல் செய்கிறேன் என்றார்.

இதையடுத்து, மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி சசிதரன் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.