Pages

Wednesday, November 27, 2013

தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க அரசு அனுமதி

"சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது: "கணினி மேம்பாட்டுக்காக தொழில்நுட்ப பூங்காக்களும், செயல் உருவாக்க மையங்களையும், மத்திய அரசு துவங்கியுள்ளது. இவை பெரும்பாலும் தனியாகவோ, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலோ அமைக்கப்பட்டுள்ளன. கணினி மேம்பாட்டு ஆய்வுகளை இப்பகுதிகளுக்கு சென்று செய்து வருகின்றனர். இது போன்ற மையங்கள் தமிழகத்தில் சென்னை தரமணி, சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம், திருப்பெருந்துறை கொங்கு பொறியில் கல்லூரி ஆகியவற்றில் உள்ளன.

ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு

இந்நிறுவனங்களால் தமிழ் மென்பொருளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. தற்போது பெருகி வரும் தமிழ் மென்பொருளின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ் மென்பொருள் உருவாக்க மையத்தை துவக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு தமிழ் இணைய கல்விக் கழகம் கோரிக்கை விடுத்தது.

இக்கோரிக்கையை ஏற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையத்தை அமைக்க 45 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் அமைக்க தேவையான அடிப்படை வசதிகள் குறித்த பரிந்துரையை அளித்துள்ளது.

இப்பரிந்துரையை ஏற்று தமிழ் இணைய கல்விக் கழகத்தின் தரைத் தளத்தில் தனி அறைகள், கலந்துரையாடல் கூடம், நூலகம், வரவேற்புக் கூடம் ஆகியவற்றை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மையத்தில் கணினிகள், மென்பொருள்கள் மற்றும் கருவிகள் இருக்கும். தமிழ் மென்பொருள்களை உருவாக்க விரும்புவோர், இம்மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சலுகை அளிக்கப்படும்

மென்பொருள் உருவாக்கம் குறித்த திட்ட வரைவை தமிழ் இணைய கல்விக் கழகத்தில் அளித்தால் அவற்றை ஆய்வு செய்து தகுதியானவர்களை வல்லுனர் குழு தேர்வு செய்யும். புதிய தமிழ் மென்பொருளை உருவாக்க தேர்வு செய்யப்பட்டோருக்கு தனி அறைகள், கணினி மற்றும் கருவிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு திட்டத்தையும் முடிக்க குறைந்தபட்சம் ஆறு மாதங்களும், அதிகபட்சம் ஒரு ஆண்டும் அவகாசம் அளிக்கப்படும்.

திட்ட செயலாக்க காலத்தில் மாதம் ஒன்றுக்கு மாணவர்களிடம் 1,000; தனி நபரிடம் 4,000; சிறு, குறுந் தொழில் முனைவோரிடம் 10 ஆயிரம் ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய மென்பொருள் பயனுள்ளதாக இருந்தால் அதன் அடிப்படையில் சேவை கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்." இவ்வாறு, நக்கீரன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.