Pages

Saturday, November 30, 2013

அரசு பள்ளி என்ற தாழ்வான எண்ணம் வேண்டாம்

தனியார் பள்ளிகள், 'அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி' என்ற விளம்பரத்துடன் செயல்படும்போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி தகுதி குறைவாக இருக்க முடியும். உழைப்பு, வெற்றி எல்லாம் உங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது; தயக்கத்தை விட்டு, சாதித்துக் காட்டுங்கள்,'' என்று, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.

சென்னை பல்கலையில் நடந்த, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசியதாவது:

இந்த ஆண்டு உங்கள் வாழ்வின் முக்கிய காலக்கட்டம். இன்ஜினியர், டாக்டராக வேண்டும் என்ற கனவோடு, பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்கிறீர்கள். அதற்கேற்ப, நீங்கள் மதிப்பெண் பெற வேண்டும்.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கடந்த ஆண்டு, விண்ணப்பித்த எல்லாருக்கும், 'சீட்' கொடுத்தனர். மீதம், 50 ஆயிரம் இடங்கள் உள்ளன.
'குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், இன்ஜினியரிங், 'சீட்' கிடைக்கும் என்றால், ஏன், விழுந்து விழுந்து படிக்கச் சொல்கிறீர்கள்' என, கேட்கலாம். நீங்கள் நன்றாக படித்தால் தான், 'கட்-ஆப்' மதிப்பெண் அதிகம் பெற முடியும். அப்போது தான், நல்ல கல்லுாரிகளில் இடம் கிடைக்கும். குறைந்த மார்க் என்றால், கொடுக்கும் இடத்தைத் தான் பெற முடியும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் நாம், மற்றவர்களுடன் போட்டி போட முடியுமா என்ற, தாழ்வு மனப்பான்மை பலரிடம் உள்ளது. தனியார் பள்ளிகளில் பெயர் பலகையின் கீழ், 'அரசு அங்கீகாரம்' பெற்றது என்று, விளம்பரத்துடன் இயங்கும் போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி தகுதி குறைவாக இருக்கும். சாதனைகள், சில நேரங்களில் வெளிச்சம் போட்டு காட்டுவது குறைவாக இருக்கலாம்.

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; எல்லாருடனும் போட்டி போட முடியும்.
பாட்டாளி, உழைப்பாளிகளின் குழந்தைகளான உங்கள் ரத்தத்தில் தான், இயல்பாகவே உழைப்பு, வெற்றி எல்லாம் ஊறியுள்ளது. அறிவுக்கும், உணர்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. இதை, சரியாக புரிந்து கொள்ளுங்கள்.
காதல் என்ற ஒற்றைச் சொல்லை தவறாக புரிந்து கொண்டு, திசை மாறாதீர்கள். உங்கள் குடும்பத்தினர் ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் உள்ளனர். அதை மனதில் நிறுத்தி படியுங்கள்; வாழ்க்கையில் நீங்கள் ஜெயித்துக்காட்டுவீர்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.