கடந்த 2008ம் ஆண்டு ஐ.ஐ.டி.,களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த முடிவின்படி, புதிதாக அமைக்கப்பட்ட ஐ.ஐ.டி.,கள், 5 ஆண்டுகள் கடந்த பிறகும், பல குறைபாடுகளில் சிக்கி தவிக்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆசிரியர் பற்றாக்குறை, சொந்த வளாகங்கள் இல்லாமை மற்றும் அங்கு படித்த மாணவர்களுக்கு சரியான வேலை வாய்ப்புகள் இன்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் புதிய IIT -கள், தங்களின் பழைய சகாக்களோடு போட்டியிட முடியவில்லை.
இந்த புதிய IIT -களில், அனுமதிக்கப்பட்ட நிரந்தர ஆசிரியப் பணியிடங்களில் பாதியளவு காலியாக உள்ளன. இவற்றில் ஐ.ஐ.டி., ஜோத்பூரும், ஐ.ஐ.டி., மண்டியும் முக்கியமானவை. ஐ.ஐ.டி., ஐதராபாத்தில் மட்டுமே, பெருமளவிலான நிரந்தர ஆசிரியப் பணியிடங்கள் நிரம்பியுள்ளன.
புதிய IIT வளாகங்கள் கிராமப்புறங்கள் போன்ற ஒதுக்குப்புற பகுதிகளில் அமைந்திருப்பதே, அவற்றில் பணிபுரிய பல திறமையான ஆசிரியர்கள் முன்வராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், மேம்படாத உள்கட்டமைப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, புதிய IIT -களை விட, NIT -களில் படித்த மாணவர்கள் 3 மடங்கு சிறப்பான வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்ற நிலை உள்ளது. புதிய IIT -களில் படித்த மாணவர்களுக்கு NIT மாணவர்களைவிட, குறைந்தளவு சம்பளத்திலேயே பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், புதிய IIT -களின் உள்கட்டமைப்பு வசதிகளும், பழைய IIT -களுடன் ஒப்பிடுகையில், மோசமாக உள்ளதாக புகார்கள் எழுகின்றன.
சில காலம் ஆகட்டும்
அதேசமயம், புதிய IIT -களின் நிலைமைக்கு ஆதரவான கருத்துக்களும் உள்ளன. இதுகுறித்து கூறப்படுவதாவது: பழைய IIT -கள் தங்களை நிரூபிக்க குறைந்தது 50 ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. எனவே, தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில், புதிய IIT -கள் சிறப்பாக செயல்படத் துவங்கிவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு.
முதலில் நிரந்தர வளாகம் வேண்டும். பிறகு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். போதுமான நிதி ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும். தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் சிறிது காலஅவகாசம் தேவை. எனவே, புதிய IIT -களை விமர்சிக்க இது சரியான நேரமில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.