Pages

Monday, November 18, 2013

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு திறன் மேம்படுத்தப்படுமா?

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்களிடம் விளையாட்டு திறனை மேம்படுத்தி விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூரில், விளையாட்டு அமைப்புகள், பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிகள் சார்பில் அடிக்கடி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.

போட்டிகளில் குறைந்த அளவில் அரசு பள்ளிகள் பங்கேற்பதோடு, வெற்றி பெறும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உள்ளனர். அவர்களால், மாணவர்கள் மத்தியில் விளையாட்டு திறனை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த முடிவதில்லை.

மாணவ, மாணவியர் மத்தியில் விளையாடுவது குறித்த விழிப்புணர்வும் இல்லை. பலரும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தொழிலாளர்களாக உள்ள பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.

அரசு பள்ளி மாணவர்களில் பலர் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளை விளையாடுவதில்லை. கூடைப்பந்து, வாலிபால், டென்னிஸ், பேட்மிட்டன், ஹாக்கி போன்ற விளையாட்டுகள்; ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற தடகள விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. சினிமா, மொபைல் போன், பிரவுசிங் சென்டர் என நேரத்தை வீணடிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து பேர் வரை உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மைதானங்களில் விளையாட்டு பயிற்சி அளிக்கின்றனர். விளையாட்டுக்கும் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பிட்ட விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர்கள், தொடர்ந்து பயிற்சி பெற்று போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுகின்றனர்.

அரசு துறைகளில் "ஸ்போர்ட்ஸ் கோட்டா"வில், வேலைவாய்ப்பு உள்ளதை அறிந்துள்ள பெற்றோர், குழந்தைகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுகின்றனர். காலை, மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், பள்ளி மைதானங்களுக்கு அழைத்து வந்து பயிற்சி பெற உதவுகின்றனர். அரசு பள்ளிகளில் அத்தகைய வசதி இருப்பதில்லை.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு பள்ளி மாணவர்களில் பலருக்கு படிப்பில் போதிய கவனம் இருப்பதில்லை; அலட்சிய மனப்பான்மையுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். விளையாட்டிலும் ஆர்வமில்லை. விளையாட்டில் சிறந்து விளங்கினால் கிடைக்கும் எதிர்கால நன்மைகள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை; விளையாட்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி, ஆர்வத்தை தூண்டுவது அவசியம்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.