Pages

Friday, November 29, 2013

சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு?

சென்னையில், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதமே கணக்கெடுப்பு பணியை துவங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் குடிசை பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களும், கட்டுமான பணிகள் உட்பட, வேலைக்காக வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்களும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. அந்த குழந்தைகள் 10 வயதிலேயே வேலைக்கு செல்கின்றனர்.

அவர்களுக்கு, கல்வி அளிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பள்ளி செல்லா குழந்தைகள் 1,781 பேரும், இடம்பெயரும் வெளிமாநில மற்றும் மாவட்ட மக்களின் குழந்தைகள் 705 பேரும் அடையாளம் காணப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

வழக்கமாக இந்த கணக்கெடுப்பு ஏப்ரல், மே மாதத்தில் நடக்கும். அப்போது கோடை விடுமுறையை முன்னிட்டு, தேர்வு முடிந்து வீட்டில் இருக்கும் மாணவர்கள் கூட பகுதி நேரமாக பணிக்கு செல்கின்றனர். இதனால் பள்ளி செல்லா குழந்தைகளை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை காணப்படுகிறது.

கடந்த ஆண்டு, 2,500 பேருக்கு மேல் பள்ளி செல்லா குழந்தைகளாக கண்டறியப்பட்டும், நகரில் பரவலாக பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் பள்ளி செல்லா குழந்தைகளை துல்லியமாக கண்டறிய இந்த ஆண்டு முதல், ஜனவரி மாதத்திலேயே, கணக்கெடுப்பை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை, தொழிலாளர் நலத் துறை, சமூக நலத் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு படை ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து ஜனவரியில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.

சென்னையில் கட்டுமான பணிகள் நடந்து வரும் பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அங்கு இந்த குழுவினர் முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் இதுதொடர்பாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கக உயர் அதிகாரிகள், மாநகராட்சி, சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது: புலம் பெயர்ந்த குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக முதல்வர், 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியின் மூலம் வெளிமாநில குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வெளிமாநில குழந்தைகளாக, 330 பேர் கண்டறியப்பட்டனர்.

இதில், ஒடிசா, ஆந்திரா மாநிலத்தவர்கள் அதிகம். பொதுவாக இந்த குழந்தைகளும் தமிழ்வழி கல்வியில் படிக்க விரும்புகின்றனர். ஒரு சிலர் தங்கள் தாய் மொழியில் படிக்க ஆசைப்படுவதால், அந்த மாநில கல்வித் துறையுடன் பேசி, ஒடிசா, ஆந்திரா பாட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவரவர் மொழியில் கற்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் ஒப்பந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.