Pages

Monday, November 25, 2013

விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர்கள் புலம்பல்

விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதும் உடற்கல்வி குறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், விளையாட்டு
ஆசிரியர்களின் முக்கிய பணி. அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்தே விளையாட்டு பிரிவுக்கான உபகரணங்கள் மற்றும் மாணவர்களை வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது, உணவு செலவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் அரசு தரப்பில் ஒதுக்கப்படும் நிதியை பள்ளிக்கு தேவையான செலவுக்கு மட்டும் ஒதுக்கிவிட்டு, விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை என விளையாட்டு ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: "பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான செலவு என தனிப்பட்ட நிதி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. பள்ளிக்காக வரும் நிதியில் இருந்தே இதற்கும் நிதி ஒதுக்க வேண்டும். பெரும்பாலான அரசு பள்ளிகளில் வகுப்பறை பயன்பாடு, எழுத்து உபகரணங்கள், மேஜை, ஆய்வகம் உள்ளிட்ட மற்ற தேவைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விளையாட்டு பிரிவுக்கு என நிதி கேட்டால் இல்லை என மறுக்கின்றனர். மாணவர்களை, வெளியிடங்களில் நடக்கும் போட்டிக்கு அழைத்துச் செல்லும்போது போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளை விளையாட்டு ஆசிரியர்களே ஏற்கும் நிலை உள்ளது" என்றார்.

இப்பிரச்னை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விளையாட்டு பிரிவுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விளையாட்டு ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.