உதவி பேராசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் எம்.பில்., படிப்பு அனுபவத்திற்கு, மதிப்பெண் அளிப்பதில் முரண்பாடு நிலவுவதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் லேடி வெலிங்டன் கல்லூரி காயிதே மில்லத் மகளிர் கல்லூரி மற்றும் நந்தனம் ஆண்கள் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்காக சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 1,093 பணியிடங்களுக்கான இந்த தேர்வில் 15 ஆயிரம் பேர் போட்டி போடுகின்றனர்.
நேற்று முன்தினம் சான்றிதழ் சரிபார்ப்பில், திடீர் குளறுபடி ஏற்பட்டது. தொலைதூர கல்வித் திட்டத்தின் கீழ், எம்.பில்., பட்டம் பெற்றவர்களுக்கு அனுபவத்திற்கான ஒரு மதிப்பெண் வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், காயிதே மில்லத் கல்லூரியில் மட்டும் சிலருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மற்ற இரு மையங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்காமல் நேரடியாக, பட்டப்படிப்பை முடிப்பவர்கள் மட்டும் தான் அரசு பணியையோ பதவி உயர்வையோ கேட்க முடியாது. ஆனால், முறையாக, பள்ளிப் படிப்பிற்குப் பின் பட்டப் படிப்பை, தொலைதூர கல்வித் திட்டத்தில் படிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இதை, அரசு, ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.
இந்நிலையில் தொலைதூர கல்வித் திட்டத்தில் எம்.பில்., படித்தவர்களின் பணி அனுபவம், சான்றிதழ் சரிபார்ப்பில், கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், காயிதே மில்லத் கல்லூரியில் பங்கேற்ற சில விண்ணப்பதாரர்களுக்கு, எம்.பில்., பணி அனுபவத்திற்கான மதிப்பெண்களை, அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
கடந்த 2009ல் வெளியான ஒரு அரசாணையை சுட்டிக்காட்டி, மதிப்பெண் பெற்றுள்ளனர். அந்த அரசாணையில் இனிமேல், தொலைதூர கல்வித் திட்டத்தில், எம்.பில்., படிப்பவர்களை அரசு வேலை வாய்ப்பின் போது, கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, எம்.பில்., படிப்பு, தொலைதூர கல்வித் திட்டத்தில் இருந்தது. தற்போது இல்லை.
எனவே அதற்கு முன் எம்.பில்., முடித்து பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உரிய மதிப்பெண் வழங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முன்வர வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணிக்கு, முதுகலை பட்டப்படிப்புடன், மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய தகுதித் தேர்வு (நெட்) தகுதியைப் பெற வேண்டும் என்பது விதி. பிஎச்.டி., உயர்ந்தபட்ச கல்வித் தகுதி. ஸ்லெட் - நெட் தகுதித் தேர்வைத் தான், அனைவரும் எழுதுகின்றனர். ஆனால், இதற்கு, வெறும், ஐந்து மதிப்பெண். பிஎச்.டி.,க்கு, ஒன்பது மதிப்பெண்.
நெட் - ஸ்லெட் முடித்தவர்களுக்கு, மதிப்பெண் குறைவாகவும், பிஎச்.டி., முடித்தவர்களுக்கு, அதிகமாகவும் வழங்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,), எப்போதும் கூறியதில்லை. அதிகாரிகளே, ஒரு முடிவை எடுத்து மதிப்பெண் நிர்ணயிக்கின்றனர். இதனால், நெட் - ஸ்லெட் தகுதி பெற்றவர்களுக்கு நான்கு மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது. ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட வேலை கிடைக்காது என்ற நிலையில் இந்த மதிப்பெண் வித்தியாசம், எங்களுக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு, விண்ணப்பதாரர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.