Pages

Friday, November 1, 2013

927 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

"ஆறு ஆண்டுகளாக, பள்ளிகளில் நிரந்தர, கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 927 பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்ப வேண்டும்" என தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.


அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன், தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், தையல், கைத்தொழில், உடற்கல்வி, இசை உள்ளிட்ட பிரிவுகளில் கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். வாரத்துக்கு ஒரு வகுப்புக்கு இரண்டு பாடவேளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிப்பு, தேர்வு, மனப்பாடம், மதிப்பெண் என்ற நோக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இரு பாடவேளை வரப்பிரசாதம். பிற பாடங்களை காட்டிலும் இதுபோன்ற வகுப்புகளில் அனைத்து மாணவர்களும், ஆர்வத்துடன் பங்கேற்க முன் வருகின்றனர்.

தற்போது மாநிலம் முழுவதும், 3,200 நிரந்தர கலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009ல், 231 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு 321 பேரை, பணி நியமனம் செய்ய சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடந்தது. ஆனால் பணி நியமனம் செய்யப்படவில்லை. ஆறு ஆண்டுகளாக நிரந்தர கலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடாமல் இழுபறியாகவே உள்ளது.

கோவை மாவட்டத்தில் 52, திருப்பூர் 20, நீலகிரி 12 உட்பட, மாநிலம் முழுவதும் 927 கலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இதற்கு மாற்றாக பகுதி நேர ஆசிரியர்களை, 5000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தனர். வாரத்தில் மூன்று நாட்கள், பணிக்கு வர வேண்டும்.

இந்த ஆசிரியர்கள், ஓவியம், தையல், இசை கற்பித்தலுக்கு பதிலாக பிற பணிகளைத் தான் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. குறைந்தபட்ச ஊதியமும், மிகுந்த இழுபறிக்கு பின் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: காலியாக உள்ள நிரந்தர கலை ஆசிரியர்கள் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தேர்வுத் துறையால் நடத்தப்பட்ட தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி, 2007க்கு பின் நிறுத்தப்பட்டது. கைத்தொழில் வகுப்பு குறைந்து வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவல பதிவுமூப்பு அடிப்படையில், 9,000 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் கலை என்ற ஓர் வகுப்பு இல்லாத சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.