மாநகராட்சி பள்ளியில் 10, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பில் இலவசமாக சுண்டல் வழங்கப்படும் என்றும், சென்னையில் இயங்கும் 200 அம்மா உணவகங்களில் தலா 3 நவீன கேமராக்கள் வீதம் 600 கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலவச சுண்டல்
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் உறுப்பினர்களில் ஒருமித்த ஆதரவோடு 5 நிமிடங்களில் 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:–
* சென்னை பள்ளிகளில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் வழங்கப்படும் ஊக்கத்தொகை இக்கல்வி ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும்.
* சென்னை மாநகராட்சி கல்வித்துறை மூலம் இயங்கும் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பில் இலவசமாக சுண்டல் வழங்கப்படும். 70 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரத்து 727 மாணவ–மாணவிகளுக்கு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை (10–ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 நாட்களுக்கும், 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு 90 நாட்களுக்கும்) சுண்டல் வழங்க மொத்த செலவினமாக ரூ.63 லட்சத்து 41 ஆயிரத்து 490 செலவினம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளிகளில் 10–ம் வகுப்பு 12–ம் வகுப்பு பயிலும் 502 மாணவ–மாணவிகளுக்கும் சிறப்பு வகுப்பில் இலவசமாக சுண்டல் வழங்கப்படும்.
600 கேமராக்கள்
* சென்னையில் இயங்கும் 200 அம்மா உணவகங்களுக்கு 600 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த ரூ.1 கோடியே 33 லட்சத்து 36 ஆயிரத்து 675 மதீப்பிட்டில் கொள்முதல் செய்யப்படுகிறது.
* சென்னை நகரில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி அளிக்கும் அதிகாரம், சென்னை கலெக்டரிடம் இருந்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வழங்க உரிய சட்ட திருத்தத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு தீர்மானம்
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 195 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. இவற்றில், சுமார் 156–க்கும் மேற்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகங்களில் குடியிருக்கும் மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, சிமெண்ட் கான்கீரிட் சாலை அமைத்தல், சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி செய்தல் மற்றும் குப்பை அகற்றுதல், சேகரிக்கப்படும் குப்பைகளை சென்னை மாநகராட்சி குப்பைகொட்டும் வளாகங்களில் கொண்டு சேர்த்தல், போன்ற பல்வேறு விதமான அடிப்படை அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
ரூ.20 கோடி நிதி
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, இத்தகைய அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளும் விதமாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதில், இதற்காக சுமார் ரூ.20 கோடி நிதி தேவைப்படும் என குடிசைமாற்று வாரியத்தால் தெரிவிக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டம் – நகர்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதிகள் நிதியில் சேமிப்பாக உள்ள ரூ.17.38 கோடி மற்றும் சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை–வருவாய் நிதியிலிருந்து ரூ.1.87 கோடி ஆக மொத்தம் ரூ.19.25 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவரை பிற துறைகளின் பணிகளுக்காக, இவ்வளவு நிதியை ஒதுக்கியதாக சரித்திரம் இல்லை. முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி ஏற்கனவே பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்படும் நீர்வழித்தடங்களில் தூர்வாருவதற்காக ரூ.7 கோடி அளவில் பணிகள் செய்யப்பட்டுள்ளதுபோல, தற்போது சென்னையில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்காக ரூ.19.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை–எளிய மக்களின் நலன் ஒன்றையே கருதி, இத்தகைய பணிகளை செய்வதற்கு சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி மாமன்றம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.