அடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப, தனியார் கல்லூரிகள் இப்போதே, மாணவர்களுக்கு, வலை விரித்து வருகின்றன. தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரை தங்கள் கல்லூரிகளுக்கு டூர் அழைத்துச் சென்று கல்லூரிகளைப் பற்றி புகழ்பாடுகின்றனர். இதில், எத்தனை மாணவர் சிக்குவர் என தெரியவில்லை.
தமிழகத்தில், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு லட்சம் இடங்கள் இருந்தன. இதில் 1.4 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின; 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை. ஏராளமான தனியார் கல்லூரிகள், மாணவர்கள் இல்லாமல் காத்தாடி வருகின்றன.
இந்நிலையில் சில தனியார் கல்லூரிகள் அடுத்த ஆண்டில் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, மாணவர்களுக்கு வலை விரித்து வருகின்றன. வரும் மார்ச் மாதம், பொதுத்தேர்வை எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களை குறிவைத்து, &'கேன்வாஸ்&' செய்யும் வேலையில் கல்லூரிகள் இறங்கி உள்ளன.
சமீபத்தில் சென்னையில் உள்ள சில தனியார் பள்ளி மாணவர்களையும், கல்வித்துறை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும் பிரபலமான அரசு பள்ளி ஒன்றின் பிளஸ் 2 மாணவியரையும் ஒரு கல்லூரி நிர்வாகம், தங்களது கல்லூரிக்கு &'டூர்&' அழைத்துச் சென்றது. ஓ.எம்.ஆர்., சாலையில் அந்த கல்லூரி உள்ளது. சொகுசு பஸ்களில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.
கல்லூரிக்குச் சென்றதும் ஆசிரியர்களை தனியாக பிரித்து அவர்களை, திருவான்மியூர் அருகில் உள்ள கலை பண்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின் மாணவர்களை, கல்லூரியின் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் அழைத்துச் சென்று கல்லூரிகளில் உள்ள வசதிகள் குறித்தும், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விளக்கி கூறினர்.
அதோடு கல்லூரியில் படிப்பவர்களுக்கு, &'கேம்பஸ் இன்டர்வியூ&' மூலம் அதிகளவில், வேலை கிடைப்பது குறித்தும் கூறினர். மாணவர்களுக்கு, அறுசுவை உணவு வழங்கி கவனித்துள்ளனர்; ஆசிரியர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி அசத்தி உள்ளனர். இதுபோன்ற யுக்தியை, பல கல்லூரிகளும் கையாள ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் பிளஸ் 2 தேர்வுக்குப் பின் சம்பந்தப்பட்ட மாணவர்களை, தங்கள் கல்லூரிக்கு வளைத்துப் போட கல்லூரிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்காக மாணவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தரமான முன்னணி கல்லூரிகள் இதுபோன்று ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கவில்லை; ஏனெனில் அண்ணா பல்கலையில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியதும், முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் மள மளவென நிரம்பிவிடும்.
போதிய அடிப்படை வசதி இல்லாத மற்றும் சுமாரான கல்லூரிகள், மாணவர்களை &'கேன்வாஸ்&' செய்தால் அதனால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். முன்கூட்டியே மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு, பள்ளி கல்வித்துறை தடைவிதிக்க வேண்டும் என ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment