Pages

Friday, November 29, 2013

ஆசிரியர்கள் 12வது நாளாக உண்ணாவிரதம்: அனைவரையும் நிரந்தரம் செய்ய கோரிக்கை

12வது நாளாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமைத் தொடர்ந்தது. கல்வித் தகுதி உடையவர்களை மட்டும் நிரந்தரம் செய்ய முதல்வர் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், விதிகளை தளர்த்தி அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுவையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் சார்பில், கடந்த 18ம் தேதி தொடங்கி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தலைமை தபால் நிலையம் எதிரே நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் சுழற்சி முறையில் பங்கேற்று வருகின்றனர். பல அரசியல் கட்சியினர் பங்கேற்று ஆதரவளித்துள்ளனர். தொடர்ந்து 12வது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் வின்சென்ட்ராய், கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தனர். பாமக மாநில செயலாளர் அனந்தராமன் பங்கேற்று ஆதரித்துப் பேசினார். பாமக வினர் பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் சம்மேளனத்தினர் பேசியதாவது:

அரசு ஊழியர் சம்மேளன பொறுப்பாளர்கள் பாலமோகனன், ஆனந்தராசன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளனர். வயது வரம்பையும், ஆசிரியர் தகுதித்தேர்வையும் தளர்த்தி கல்வித் தகுதி உடையவர்களை நிரந்தரம் செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். ஆனால் பிஎஸ்டி பதவிகளில் பிஎட் கல்வித் தகுதி உடையவர்களை நியமிக்க முடியாதன அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்ட விதிகளை எடுத்துக்கூறி, நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை, கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும்.கடந்த 2011ஆம் ஆண்டு விதித்திருத்த ஆணையின் அடிப்படையில், அனைத்து ஆசிரியர்களையும் பணி நியமனம் செய்து முதல்வர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 350க்கும் மேற்பட்ட பதவிகளை நிரப்ப வேண்டியதில், 21 பணியிடங்களை மட்டும் நிரப்ப ஏற்பாடு செய்வதாகவும், அதற்காக போராட்டத்தை கைவிட வேண்டுமென கல்வி அமைச்சர் தெரிவித்திருப்பது வருத்தத்தை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.