Pages

Thursday, October 17, 2013

சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்காக வத்திராயிருப்பு மாணவனுக்கு தேசிய விருது

சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்காக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவனுக்கு, மத்திய அரசின் தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருது (இக்னைட்) வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் அதன் இணை நிறுவனமான தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்காக, இந்தியா முழுவதும் 20,836 கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் டெனித் ஆதித்யா, "அட்ஜஸ்டபிள் எலக்ட்ரிசிட்டி எக்ஸ்டென்சன் போர்டு' என்ற மின்சாதனத்தை கண்டுபிடித்து, சமர்ப்பித்திருந்தார். விருதுக்கான தேர்வு, தேர்வு பெற்ற கண்டுபிடிப்புகளும், அவர்களுக்கான விருதும், நேற்று (அக்.,15) அறிவிக்கப்பட்டது. 38 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டதில், வத்திராயிருப்பு மாணவன் டெனித் ஆதித்யாவின் மின்சாதனம், சிறந்த தேசிய கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டு, பரிசும் அறிவிக்கப்பட்டது. தேர்வு பெற்றவர்களுக்கு, நவம்பர் 19 ல் ,அகமதாபாத் ஐ.ஐ.எம். மையத்தில் நடக்கும் விழவில், விருதுகளும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் வழங்கப்பட உள்ளது. மாணவர் கண்டுபிடிப்பான, "அட்ஜஸ்டபிள் எலக்ட்ரிசிட்டி எக்ஸ்டென்சன் போர்டு' ஒரு வகை பிளக்பாய்ண்ட் . இதில், பேன், மிக்சி, கிரைண்டர், ஓவன் உட்பட அனைத்து அளவு பிளக்குகளையும், இந்த ஒரே சாதனத்தில் பொருத்திக்கொள்ளலாம். அதிகபட்சமாக 17 க்கு மேற்பட்ட பிளக்குகளை பொருத்தலாம். உலக அளவில் 156 நாடுகளில், 8 விதமான பிளக்குகள் நடைமுறையில் உள்ளன. ஒரு நாட்டில் உள்ள பிளக்குகளை, அடுத்த நாட்டில் உள்ள பிளக்குகளில் பொருத்த முடியாது. ஆனால், இந்த மின் சாதனத்தில், உலகத்தில் உள்ள 8 விதமான பிளக்குகளையும், இதில் பொருத்தி, மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியும்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.