தாவரவியல் முதுநிலை ஆசிரியர் தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
முதுநிலை ஆசிரியர் தேர்வு
நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள். எம்.எஸ்சி. (தாவரவியல்), பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம், 193 முதுநிலை தாவரவியல் உதவி பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கடந்த 21–7–2013 அன்று நடத்திய எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன்.
இந்த தேர்வு முடிவு 11–10–2013 அன்று வெளியானது. அதில், எனக்கு 93 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண் 94 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து என் விடைத்தாளை சரிபார்த்தபோது, நான் அளித்த சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.
பணி வழங்க வேண்டும்
இந்த தேர்வில், கேள்வி எண்கள் 31–க்கு சரியான விடைக்கு மதிப்பெண் வழங்காமலும், தவறான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டும் உள்ளது. நான் அளித்த சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தால், ‘கட் ஆப்’ மதிப்பெண் 94 பெற்று, ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக இருந்து இருப்பேன்.
இதுகுறித்து, 31–வது கேள்விக்கு சரியான விடைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு, மனுவாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன்.
இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே சரியான விடை அளித்த எனக்கு மதிப்பெண் வழங்கவும், ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றுவிட்டதால், எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
பாடப்புத்தக ஆதாரம்
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.அன்பரசு ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியர் தகுதி தேர்வில், தாவரவியல் பாடத்தில் 31–வது கேள்விக்கு சரியான விடையை மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது சரியான விடைதான் என்பதை 11–ம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.
இப்போது, மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நிர்ணயம் செய்துள்ள ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை அவர் பெற்றுவிடுவார்.
நிரப்பக்கூடாது
எனவே, மனுதாரரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுக்க வேண்டும். 193 தாவரவியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Have any idea about equivalent subjects TET and PG for last year as court ordered to give post? conduct 8148622030
ReplyDelete