Pages

Sunday, October 13, 2013

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்: வைகோ

"ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என பாளையங்கோட்டை சவேரியார் பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் வைகோ பேசினார்.

நெல்லை மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில் 14வது லூயிஸ் வெர்டியர் கோப்பைக்கான மாநில போட்டி, பாளையங்கோட்டை சவேரியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. இறுதி போட்டியில் பாளை., சவேரியார் பள்ளி அணி, தஞ்சாவூர் அரசு பள்ளி அணியை வெற்றிகொண்டது.

திருவாரூர் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும், திருப்பூர் அணி நான்காம் இடத்தையும் பெற்றன. சேவியர் கலைமனைகள் அதிபர் டேனிஸ் பொன்னையா தலைமை வகித்தார். தமிழக கைப்பந்து கழக பொதுச் செயலர் மார்டின் சுதாகர் முன்னிலை வகித்தார்.

விழாவில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகளை வழங்கி பேசுகையில், "நான் படிக்கும் போது மாணவர்கள் ஜாதி, மதம் பார்த்ததில்லை. நான் சினிமாவுக்கு எதிரி அல்ல. பழைய சினிமா படங்களில் வன்முறை இருந்ததில்லை. சமூக அக்கறையோடு கருத்துக்கள் சொல்லப்பட்டன. சமீப காலத்தை சினிமாக்களில் வன்முறை அதிகம் உள்ளது.

சமூகத்திற்கான கருத்துக்கள் குறைவு. விளையாட்டு மூலம் மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். விளையாட்டு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அவசியமாகும். தாய், தந்தையருக்கு அடுத்த படியாக உள்ள ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடந்தால் எதிர்காலம் சிறந்து விளங்கும்" என்றார்.

சமீபத்தில், தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் கொலை செய்யப்பட்டார். இதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு "அட்வைஸ்" செய்தது போல் இருந்தது வைகோ பேச்சு.

வைகோவிடம், பத்திரிகையாளர்கள் அரசியல் நிலை குறித்து பேட்டி கேட்டனர். அதற்கு அவர், இதுபள்ளி வளாகம், இங்கு அரசியல் வேண்டாம் என தெரிவித்தார். கார் முன்பு கட்டப்பட்டிருந்த ம.தி.மு.க., கொடியும் கழற்றப்பட்டிருந்தது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.