துப்புரவு பணியாளர் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் இருக்க காரணமாக இருந்த, திருச்சி ஏ.இ.ஓ.,வை மாற்றக்கோரி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
தமிழக உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை (பொ) அமைச்சர் பழனியப்பன், திருச்சியில் கடந்த, இரண்டு நாட்களாக முகாமிட்டு, பள்ளிகளில் ஆய்வு செய்து வந்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆல்பர்ட்தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நீலகண்டன், ஆல்பர்ட்தாஸ், மாநகர தலைவர் ஜேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து, திருச்சி நகர சரக உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ரெஜிபெஞ்சமின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி நகர சரகத்துக்கு உட்பட்ட தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, பயிலும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 2012-2013-ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற்றுத்தரவில்லை என மனு முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம்.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனுப்பிய கடிதத்தில், துப்புரவு பணியாளர்கள் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, 3 லட்சத்து, 62 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்பட்டதாக, திருச்சி நகர சரக உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அளித்த தவறான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி நகர சரக எல்லையில், திருச்சி மாநகராட்சி உள்ளது. அதில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் குழந்தைகளின் நிலைப்பாடு வேறு. எஸ்.சி., எஸ்.டி., குழந்தைகளின் நிலைப்பாடு வேறு. துப்புரவு பணியாளரின், ஒன்று முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை, படிக்கும் குழந்தைகளின் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு ஆணைப்படி, ஆண்டுக்கு, 1,850 ரூபாய் தமிழக அரசு மூலம் வழங்கப்படுகிறது.தாழ்த்தப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரைச் சார்ந்த, 3, 4, 5 வகுப்பு மாணவியருக்கு மட்டும், ஆண்டு ஒன்றுக்கு, 500 ரூபாய் வீதமும், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு, 1,000 ரூபாயும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலருக்கு அனுப்பிய கடிதத்தில், தாழ்த்தப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவை மட்டும் சுட்டிக்காட்டி, கல்வி உதவித்தொகை முழுமையாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.துப்புரவு பணியாளரின் குழந்தைகளின் கல்வி உதவித் தொகை பட்டுவாடா செய்ததாக குறிப்புகள் எதுவும் இல்லை. இதன்மூலம் அவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தரவில்லை என்பது நிரூபணமாகிறது.
இதற்கு நகர சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரெஜிபெஞ்சமின் என்பவரே முழுக்காரணம். இவர் அளித்த தவறான தகவலை கொண்டு தான், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கடிதம் அனுப்பினார். இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சற்று பொறுப்பு குறைந்த அலுவலகத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பழனியப்பன், இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.