Pages

Saturday, October 26, 2013

மறக்கப்படும் சத்துணவு: கீரைகளின் வகைகள் குறித்த தொடர் ஆராய்ச்சி அவசியம்

நம் முன்னோர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான கீரை வகைகளின் பெயர்கள் தெரியாததால் அவை களைச் செடிகளாக மாறி வருகின்றன.


மாறிவரும் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாறுபாடு, பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால், பயன்பாட்டில் இருக்கும் கீரை வகைகளும் அழிய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித வாழ்க்கையின் அனைத்து நுகர்வுகளும், இயற்கையிடம் இருந்து தான் கிடைக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என அனைத்தும் இயற்கை தந்தவையே. மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் காய்கறிகள் மற்றும் கீரை வகையிலே அடங்கியுள்ளன. கீரை வகைகளில், விட்டமின் எ, பி-12 சத்துக்கள் நிறைந்துள்ளன.

வேகமாக மாறி வரும் கலாசார முறையால் பலர் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதே கிடையாது. இதனால் சத்துக்குறைபாடு போன்ற அழையா விருந்தாளிகளுக்கு வரவேற்பு கம்பளம் விரித்து மருத்துவமனையில் கிசிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

சுற்றுச்சூழல் மாறுபாடு, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்குவது உள்ளிட்ட காரணங்களால் கீரை வகைகள் குறைந்து கொண்டே போகின்றன. நம் முன்னோர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், இன்று 10க்கும் குறைவான கீரை வகைகளையே அவ்வப்போது சாப்பிடுகிறோம். மீதமுள்ள கீரை வகைகள், களைச்செடிகள் போல், வெட்டி வீசப்படுகின்றன. கீரை செடிகளின் மகத்துவம் தெரியாமலே,அவை முட்புதருக்குள் வளர்ந்து, காய்ந்து சருகுகளாகின்றன.

பழங்குடியினர் மலைகளில் இருக்கும் கீரை வகைகளுக்கு தங்களுக்கு தெரிந்த பெயர்களை வைத்துக் கொண்டு அவற்றை சமைத்து சாப்பிட்டனர். அவை, தலைமுறையோடு அழிந்து போனதாலும், பல கீரை வகைகளுக்கு பெயர் தெரியாமலே அழிவை நோக்கியுள்ளது. மேலும், பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால் கீரை வகைகளின் தன்மை மாறுபடுகிறது. இந்நிலை நீடித்தால், சத்துள்ள உணவுப்பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக பார்க்கவும் வாய்ப்புள்ளது.

காட்டுயிர் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், "மனித உடலுக்கு தேவையான விட்டமின்களை தருவதில் கீரை வகைகள் முன்னோடியாக உள்ளது. சளி, இருமல், வாய்ப்புண், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை என பலவிதமான நோய்களுக்கு, மருந்து பொருளாக கீரைகளை பயன்படுத்தினர்.

பழங்குடியின பெண்கள், சுகப்பிரசவத்திற்காக 16 வகையான கீரைகளை சாப்பிட்டுள்ளனர். ஆனால், இன்றோ நாம் மாதத்திற்கு ஒருமுறையே கீரைகளை சாப்பிடுகிறோம். முன்னோர்களின் பலகட்ட ஆராய்ச்சிக்கு பிறகே, சாதாரன செடிகளை சாப்பிடக்கூடிய கீரை வகைகள் என கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்த தலைமுறைக்கு, கொடுக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கீரைவகைகளை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் கீரை வகைகளும், அழிய வாய்ப்புள்ளது" என்றனர்.

தாவரவியல் பேராசிரியர் டாக்டர்.ராமச்சந்திரன் பேசுகையில், "கிராமத்தில் பயன்படுத்தப்படும் பல கீரை வகைகள் நகரத்தில் இருப்போருக்கு தெரிவதில்லை. மக்கள் தங்களுக்கு தெரிந்த பெயர்களை வைத்து கீரைகளை அடையாளப்படுத்துவதால், குறிப்பிட்ட கீரைக்கான பெயர் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதுவும், கீரை வகைகளை அடையாளம் காண முடியாததற்கான ஒரு காரணமாகும்.

பண்ணைக்கீரை, தவசிக்கீரை, முசுமுசுக்கீரை, கோவைக்கீரை, முள்கீரை, நஞ்சுண்டான், சுக்குட்டி கீரை போன்ற, இருபதுக்கும் மேற்பட்ட கீரை வகைகள், பெரும்பாலானோருக்கு தெரியாததால், அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதை காக்க, கீரைகளின் வகைகள் குறித்த தொடர் ஆராய்ச்சி அவசியம். தங்களுக்கு தெரிந்த கீரைகளை, அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டினால், பயன்பாட்டில் இருக்கும் கீரைகளையாவது பாதுகாத்துக் கொள்ள முடியும்", என்றார்.

2 comments:

  1. please try to publish names, photos characteristics, uses , names of the same plant in various locations and .how to cook .This will useful to others.

    ReplyDelete
  2. please try to publish names, photos characteristics, uses , names of the same plant in various locations and .how to cook .This will useful to others.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.