Pages

Friday, October 18, 2013

2 ஆண்டுகளுக்கொரு முறை இலவச புத்தக யோசனை - ஏற்க மறுப்பு

ஆண்டுதோறும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதற்குப் பதில், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கினால் போதாதா என்ற, மாநில திட்டக் குழுவின் யோசனையை ஏற்க, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மறுப்பு தெரிவித்தனர்.

மாநில திட்டக்குழு துணைத் தலைவர், துறை வாரியாக, செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு தேவை குறித்தும், ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த வரிசையில், பள்ளி கல்வித்துறை குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று, மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. குழுவின் துணைத் தலைவர், சாந்தஷீலா நாயர் தலைமையில் நடந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை முதல், பிற்பகல் வரை நடந்த கூட்டத்தில், துறையின் சார்பில் செயல்படுத்தப்படும், பல்வேறு திட்டங்கள் குறித்து, சாந்தஷீலா நாயர், ஆய்வு செய்தார். பள்ளி கல்வித்துறைக்கு, நடப்பு நிதி ஆண்டில், 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனினும், இதில், இலவச சீருடைக்கு, 353 கோடி; லேப் - டாப் திட்டத்திற்கு, 925 கோடி; புத்தகப் பைக்கு, 19.79 கோடி; நோட்டுப் புத்தகங்களுக்கு, 110 கோடி ரூபாய் என, 14 வகையான இலவச திட்டங்களுக்கு மட்டும், பெரும் தொகை செலவிடப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை, அடுத்த நிதி ஆண்டுக்கும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமா, தேவையில்லாத திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா, தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் எனில், அடுத்த ஆண்டிற்கு, எவ்வளவு செலவு ஆகும் என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, மாநில திட்டக்குழு துணைத் தலைவர், ஆய்வு செய்தார்.

ஆண்டுதோறும், மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டுமா? இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கினால் போதாதா ஒரு மாணவர் பயன்படுத்தும் புத்தகத்தை, அடுத்த மாணவர் பயன்படுத்த ஏற்பாடு செய்தால் என்ன என, மாநில திட்டக்குழு அதிகாரிகள், யோசனை கேட்டுள்ளனர். இதைக் கேட்டதும், அதிகாரிகள், ஆடிப்போயினர். அய்யய்யோ... இது, பல ஆண்டுகளாக, தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டம். இலவச திட்டங்களில், முக்கிய திட்டமாக, பாடப் புத்தகங்கள் உள்ளன. இதில், மாற்றம் செய்வது எல்லாம் சரிப்பட்டு வராது என, அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், 45,208 பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை பயிலும், 88 லட்சத்து, 94 ஆயிரத்து, 797 மாணவ, மாணவியருக்கு, 217.22 கோடி ரூபாய் செலவில், இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.