Pages

Saturday, October 26, 2013

அரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்!

சரா 'ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?' பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.
சென்னை அருகே வண்டலூருக்குப் பக்கத்தில் உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென தனி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அவ்வப்போது அப்டேட் செய்து வரும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் பேசினேன். "அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பலரும் மோசமாகவே பார்க்கிறார்கள். எங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள் என்றே சிலர் நினைக்கிறார்கள். இதை எனக்குத் தெரிந்தவர்களே என்னிடம் கலாய்த்தல் தொனியில் குத்திக்காட்டியிருக்கிறார்கள். அத்தகையோர் ஒவ்வொருவரிடமும் என்னால் விளக்கத்தை அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்குப் புரியவைப்பதும் கடினம். அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையையும், எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்த மிகச் சில நண்பர்களிடம் விருப்பம் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்துக்கு இப்போது லைக்குகள் 500-ஐ தாண்டியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் எதிர்வினைகள் ஊக்கத்தை அளிக்கிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன். தமிழகத்தில் முப்பருவ முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வளரறி மதிப்பீடு பிரிவின் மதிப்பெண்களை அள்ளுவதற்காக மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைக்கொண்டு விதவிதமான புராஜெக்ட்டுகளை செய்து, தங்கள் ஆசிரியர்களிடம் அசத்தி வருகிறார்கள். இந்த மதிப்பீட்டு முறை, இந்தக் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் படைப்பாற்றல் வியக்கத்தக்கது. தங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான புராஜக்ட்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த விவரம் அனைத்தும் இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகள்தான் இந்தப் பக்கத்தின் ஹைலைட். "எங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை, உலகுக்கு ஆதாரங்களுடன் உரைப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கம் துணைபுரிகிறது. எங்கள் பள்ளியில் கொண்டாடும் 'ஜாய் ஆஃப் கிவிங்', 'ஆசிரியர் தினம்' உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறோம். நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே ஏழ்மையின் பின்னணி கொண்டவர்கள். இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கு, இளைஞர்கள் பலரும் முன்வந்திருக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவதற்கும் சிலர் உறுதி அளித்திருக்கிறார்கள். என் கோபத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், இப்போது என்னையும், சக ஆசிரியர் நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தளமாகவே மாறிவிட்டது. எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்புக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவருமே காரணமானவர்கள். அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்கள் பகுதியில் இப்பள்ளிக்கு நன்மதிப்பு கூடியிருக்கிறது" என்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி. சமீபத்தில்கூட தன் மாணவர்கள் போட்டி ஒன்றுக்காக செய்த புராஜெக்டை, யூடியூபில் பதிவேற்றி, அதற்கு இணையவாசிகளின் ஆதரவையும் நாடினார். அந்தப் புராஜெக்ட்டைப் பார்க்க http://youtu.be/HioD6RKgPe4 ஃபேஸ்புக் என்பது பொழுதுபோக்கு அல்ல... 

3 comments:

  1. ungal pani melum sirapadaiya enathu nenjartha valthukkal mam.

    ReplyDelete
  2. give that Facebook page name pls

    ReplyDelete
  3. We also have our facebook page.... www.facebook.com/pupschoolcp
    Just share through it and helps us to get maximum likes and support from public for our school development....

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.