வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன், நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. சுமார் 9 லட்சம் மாணவர்களுக்கு, கல்விக் கடனாக 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியருக்கு கல்விகடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டில் கல்வி பயில விரும்புவோருக்கு பத்து லட்ச ரூபாயும், வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு 20 லட்ச ரூபாயும் கல்விக்கடனாக வழங்கப்படுகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம், கல்விக்கடன் வசதியை மாணவர்கள் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, எவ்வளவு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை, மத்திய நிதி அமைச்சகம், நேற்று, டில்லியில் வெளியிட்டது.
அதன்படி நாடு முழுவதும், 70 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் வசதியை தமிழகம்தான் அதிக அளவில் பயன்படுத்தியுள்ளது. 17 ஆயிரம் கோடி ரூபாய், கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த கடன் அளவில், 24 சதவீதம் ஆகும். தமிழகத்தில் உள்ள ஒன்பது லட்சம் மாணவ மாணவியர் பயனடைந்துள்ளனர். தேசிய அளவில் தென் மாநிலங்கள் தான் அதிக அளவில் கல்விக்கடன் திட்டத்தை பயன்படுத்தியுள்ளன.
தென் மாநிலங்களுக்கு அடுத்ததாக, கிழக்குப்பகுதி மாநிலங்கள் அதிக அளவில் கல்விக்கடன் பெற்றுள்ளன. கல்வியறிவு அதிகம் பெற்றுள்ள மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள், அதிக அளவில் பயன் அடைந்துள்ளனர். மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு 5,500 கோடி ரூபாய் கல்விக்கடன் கிடைத்துள்ளது. இரண்டு லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.