Pages

Saturday, October 5, 2013

குருப்-2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், நேற்று, கூறியதாவது: கடந்த மார்ச், 2ம் தேதி, ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வு நடந்தது. பொதுப்பணித்துறை உள்ளிட்ட சில துறைகளில், காலியாக உள்ள, 220 பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடந்தது. இத்தேர்வை, 51,477 பேர் எழுதினர். இதன் முடிவுகள், இன்று (நேற்று), தேர்வாணைய (www.tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில், மதிப்பெண் அடிப்படையில், 652 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்கள் விவரமும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்கள், வரும், 18ம் தேதிக்குள், சான்றிழ்களை, தேர்வாணைய இணையதளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். மேலும், சான்றிதழ்களின் நகல்களை, தேர்வாணையத்திற்கு, தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப்பின், தகுதி வாய்ந்தவர்கள், பொறியாளர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர்.

குரூப்-2 தேர்வுக்கு, 6 லட்சத்து, 85 ஆயிரத்து, 198 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை, வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு, டிச., 1ம் தேதி, 115 இடங்களில் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66 பேர், இந்து அறநிலையத் துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்" பணிக்கு, 39 பேர் உட்பட, 1,064 பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது.

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 12 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில், இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா, தேர்வாணைய செயலர், விஜயகுமார், ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.