Pages

Tuesday, October 1, 2013

1,000 பள்ளிகள் அங்கீகாரம் பெற முடியாமல் தவிப்பு

"பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி, குறைந்தபட்ச நிலப்பரப்பு தேவைக்கான நிபந்தனைகளை, நிரந்தரமாக தளர்த்தி, விண்ணப்பித்து காத்துள்ள, அனைத்து வகை பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும்"
என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்க நிர்வாகிகள், முதல்வர் தனிப்பிரிவில், நேற்று மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: அரசு உத்தரவுப்படி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, மாநகராட்சி பகுதியில், ஆறு கிரவுண்ட்; மாவட்டத் தலை நகரில், எட்டு கிரவுண்ட்; நகராட்சியில், 10 கிரவுண்ட்; பேரூராட்சியில், ஒரு ஏக்கர்: ஊராட்சியில், மூன்று ஏக்கர் இருக்க வேண்டும். இந்த அரசாணை, அரசு பள்ளிகளுக்கும், தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

இவ்வாணை, தற்போது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், 1,000 தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இச்சட்டத்தை உண்மையாக அமல்படுத்தினால், அதிகம் பாதிக்கப்படுவது, அரசு பள்ளிகளாகத் தான் இருக்கும்.

எனவே, நிலப்பரப்பு தொடர்பான அரசாணை, பழைய பள்ளிகளுக்கு பொருந்தாது. இனி துவங்கப் போகும் பள்ளிகளுக்கு பொருந்தும் என, உத்தரவிட வேண்டும். அல்லது நிலத்தின் விலை உயர்வால், இன்றைய சூழலில் வேறு இடம் கிடைக்காது என்பதாலும், பள்ளியை சுற்றி, ஆயிரக்கணக்கான வீடுகள் வந்து விட்டதால், அவற்றை மீறி, பள்ளியிடம் ஒரே இடத்தில் வாங்க முடியாது என்பதால், நிலத்தின் அளவை குறைத்தோ அல்லது அரசாணையை நீக்கியோ உத்தரவிட வேண்டும்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட, வல்லுனர் குழு அறிக்கையை ஏற்று, உடனே அந்த அறிக்கையை வெளியிட்டு, எந்தப் பள்ளிக்கும் பிரச்னை இல்லாமல், அனைத்து பழைய பள்ளிகளையும், நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண்: 48, 49ல் கூறப்பட்டுள்ள, குறைந்தபட்ச நிலப்பரப்பு தேவைக்கான நிபந்தனைகள், நிரந்தரமாக தளர்த்தி, விண்ணப்பித்து காத்துள்ள, அனைத்து வகை பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.