அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, கல்வி ஊக்கத்தொகையாக எஸ்.எஸ். எல்.ஸி., படிப்பவர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 1,500 ரூபாயும், பிளஸ் 1 படிப்பவர்களுக்கு 1,500 ரூபாயும், பிளஸ் 2 படிப்பவர்களுக்கு 2,000 ரூபாயும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
கடந்த, 2011-2012ம் கல்வியாண்டுக்கான, கல்வி ஊக்கத்தொகை டிபாஸிட் ரசீதுகளை, சேலம் மாவட்டம் முழுவதும் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வழங்கினார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகையாக, டிபாஸிட் ரசீது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உட்பட்ட, "தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ்" மூலம் வழங்கப்பட்ட டிபாஸிட் ரசீது, ஓராண்டு வாய்தா, 2012 செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. முதிர்வு தேதி முடிந்த பின்னர் மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். அதனை மாணவ, மாணவியர், வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஆனால், வாய்தா தேதி முடிந்து ஓராண்டு ஆகியும் அரசால் வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகை கொடுக்கவில்லை. அதனால், சேலம் மாவட்டத்தில் மாணவ, மாணவியர், பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கல்வித்துறைக்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கப்படுகிறது எனக் கூறும் தமிழக அரசு, மாணவ, மாணவியருக்கு பவர் ஃபைனான்ஸ் மூலம் டிபாஸிட்டாக வழங்கிய கல்வி ஊக்கத்தொகையை, உடனடியாக வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.