தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர்த்திங்கள் 5ஆம் நாள், ஆண்டு தோறும், ஆசிரியர் தினம் என நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் ஆசிரியர் தின நாளில் தமிழக ஆசிரியர் சமுதாய அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உள மார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
பேரறிஞர் அண்ணாவை தொடர்ந்து நான் தமிழகத் தில் ஆட்சிப் பொறுப் பேற்ற வேளைகளில் உள்ளாட்சி நிறுவனப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை , 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை பதவி உயர்வுகள் வழங்கும் திட்டம்; பணியில் இருக்கும் ஆசிரியர், அரசு ஊழியர் இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்குத் தற்போது 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் குடும்பப் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அளிக்க வகை செய்து 1.12.1974 முதல் நடை முறைப்படுத்திய ‘தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம்’, ஆசிரியர், அரசு ஊழியர் இறந்தால் அவர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படை நியமனம் வழங்கும் திட்டம்; பதிவு முன்னுரிமை அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் உட்பட ஆசிரியர் சமுதாயத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.
குறிப்பாக மத்திய அரசின் 6–வது ஊதியக் குழு பரிந்துரைகள் அடிப்படையில் தென் மாநிலங்களில் முதல் மாநிலமாகத் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதங்களை ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 1.1.2006முதல் நடைமுறைப்படுத்தி, அதன் காரணமாக 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கி ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டதையும்; ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆசிரியர்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள் வழங்கியதையும் ஆசிரியர் சமுதாயம் நன்கு அறியும்.
இத்தகைய மகத்தான சலுகைகள் பலவற்றை ஆசிரியர்களுக்கு வழங்கிய நிகழ்வுகளோடு; ஆசிரியர்களுக்கு, ‘நல்லாசிரியர் விருது’ ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என மாற்றி வழங்கச் செய்ததையும்; விருதுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ.1000 என்பதை ரூ.5000 என உயர்த்தித் தந்தும் ஆசிரியர் சமுதாயத்தை அரவணைத்து வந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசே.
தமிழக ஆசிரியர் சமுதாயம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்; அவர்கள் குடும்பம் செழிக்க வேண்டும்; அப்பொழுதுதான் தமிழ்ச்சமுதாயம் என்றும் அறிவார்ந்த சமுதாயமாக எழுச்சிபெற்று திகழும் என்ற விழைவோடு தமிழக ஆசிரியப் பெருமக்களுக்கு இந்த ஆண்டின் ஆசிரியர் தின நல்வாடிநத்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:– இந்தியாவில் ஆசிரியர் நாளைக் கொண்டாடும், ஆசான்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டப்படிப்புகளையும் தாய் மொழியிலேயே வழங்க வகை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த ராதாகிருஷ்ணன் பிறந்த தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி மோகம் தலைவிரித்தாடுவது மிகுந்த கவலையளிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தாய்மொழி வழிக் கல்வியை வளர்க்கவும், ஒப்புவிக்கும் திறனை மட்டும் ஊக்குவிக்கும் ஆங்கில வழிக் கல்வி முறையை விரட்டி அடிக்கவும் பாடுபட வேண்டும்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன்:–
வலிமையான பாரதத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு இன்னும் வளமான நன்மைகளைச் செய்வதிலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதிலும் எந்நாளும் எங்கள் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் முன்னிற்கும். ஆசிரியப் பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தனி நன்னாள் வாழ்த்துக்களை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.