Pages

Tuesday, September 24, 2013

தமிழகம் முழுவதும் பரவும் பார்வையற்றோர் போராட்டம்: முடிவுக்கு வருவது எப்போது?

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாணவர்கள், சென்னையில் நடத்தி வரும் போராட்டம், ஏழாவது நாளை தாண்டியும், நடந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும், நான்கு மாணவர்களின், நாடித்துடிப்பு குறைந்து வருகிறது. இப்பிரச்னையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர் சங்கத்தினர், சென்னையில், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று, தலைமை செயலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்திய, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, பழநி, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில், பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என, பார்வையற்ற மாணவர்கள் தெரிவித்தனர். தினந்தோறும், சென்னையின் பல்வேறு பகுதிகளில், மாணவர்கள் போராடி வருவதால், பொதுமக்களின் ஆதரவும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்து வருகிறது. பல இடங்களில், மாணவர் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என, பொதுமக்களே, கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜேந்திரன், வில்வநாதன், பானுகோபன், சக்திவேல், அரவிந்தன், பெரியான், சுரேஷ், வீரப்பன், தங்கராஜ் உள்ளிட்ட, ஒன்பது பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள், கால வரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ள மறுத்த மாணவர்கள், தொடர்ந்து உணணாவிரதம் இருந்து வந்தனர். இவர்களின் நாடித்துடிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று, நான்கு மாணவர்களுக்கு, நாடித்துடிப்பு பெரிய அளவில் குறைந்தது. இருப்பினும், தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை, போராட்டம் தொடரும் என, உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.