Pages

Saturday, September 21, 2013

செயல்படாத மாற்றுத் திறனாளிகள் துறை: கமிஷனரை மாற்ற கோரிக்கை

"கடந்த ஓராண்டாக, மாற்றுத்திறனாளி நலத்துறையில் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இதனால், மாணவர்கள் வேதனை அடைவதுடன், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இத்திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ள, கமிஷனர் ஜெயக்கொடியை "சஸ்பெண்ட்" செய்ய வேண்டும்," என, பார்வையற்ற பட்டதாரி மற்றும் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் சென்னையில் ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கிண்டியில் போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்த போலீசார் மாலையில் விடுவித்தனர்.

இது குறித்து, அச்சங்கத்தின் தலைவர் நாகராஜன் கூறியதாவது: "மாற்றுத்திறனாளிகளுக்கென கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எதையும், செயல்படுத்தவில்லை. குறிப்பாக, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிகணினிகளில், "ஜாஸ்" என்ற, மென்பொருள், பொருத்த, 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. மென்பொருள் பொருத்தினால் மட்டுமே, அது வழங்கும் வழிகாட்டுதல் படி செயல்பட முடியும். இல்லையெனில் அலங்காரப் பொருளாக மட்டுமே மடிகணினிகள் இருக்கும். ஓராண்டாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதே போல் 5,000 ஒளிரும் மடக்கு குச்சிகள் வாங்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றும் அது திட்டமாக மட்டுமே உள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள், முறையாக சீரமைப்பின்றி இருக்கின்றன. அதில், போதிய ஆசிரியர்களும் இல்லை.

அரசு பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், போராடியே, உதவித்தொகை பெற வேண்டி உள்ளது.

குறைந்த அளவு பார்வை தெரியும் மாணவர்கள், படிப்பதற்கு, குவிலென்ஸ் வாங்க, 17 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவும் நடைமுறைக்கு வரவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, வழங்க வேண்டிய, இலவச சீருடையை ஓராண்டாகியும், இன்னும் வழங்கவில்லை.

தென் மாநிலங்கள் முழுக்க, பிரெய்ல் புத்தகங்களை அச்சிட்டு தந்த சென்னை, பூந்தமல்லி பிரெய்ல் அச்சகம், இன்று குப்பையாக இருக்கிறது. இவ்வாறு, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட செய்து தருவதில்லை. இதனால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் வேதனை அடைவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஓராண்டாகியும், இத்திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ள, கமிஷனர் ஜெயக்கொடியை, "சஸ்பெண்ட்" செய்ய வேண்டும்." இவ்வாறு, அவர் கூறினார்.

பெருகும் ஆதரவு

ஐந்தாவது நாளாக பார்வையற்ற பட்டதாரி மாணவர் நடத்தும் போராட்டத்துக்கு மாற்றுத்திறனாளி அமைப்புகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பார்வையற்ற ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம், புரட்சிகர மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டவை தொடர்ந்து, ஆதரவை தந்து வருகின்றன.

பார்வையற்ற மாணவர் போராட்டம், தொடர்ந்து நடந்தால், இன்னும் பல்வேறு சங்கங்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.