உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் ஆளுங்கட்சி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசுப்படி நடந்ததாக தாக்கலான வழக்கில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, தகுதியானவர்களின் பெயர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6ல் பரிந்துரைத்தது. வாட்ச்மேன் பணிக்காக, 2012 ஜூன் 14ல், மேலூர் கல்வி மாவட்ட அலுவலக நேர்காணலில் பங்கேற்றேன்.
நான் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எனக்கு கூடுதல் தகுதி இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை. மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் மேற்கண்ட பணி நியமனங்கள் குறித்த பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலர்களிடம் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரினேன். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு மட்டும் பட்டியல் வழங்கினர். அதில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, 28 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்டச் செயலர், தொட்டியம் மாவட்டச் செயலர் சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என, தனித்தனியே பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. மற்ற இரு கல்வி மாவட்ட அதிகாரிகள் பதில் தரவில்லை. பணி நியமனம் சட்டவிரோதம், என, அறிவித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே நீதிபதி, "ஐ.பி.எஸ்., அதிகாரி விசாரித்தால், தொழில்நுட்ப ரீதியாக நடந்துள்ள தவறை வெளிக்கொணர முடியும். அரசு வழக்கறிஞர், "ஐ.ஏ.எஸ்., அதிகாரி மூலம் விசாரிக்கலாம்," என்கிறார். இதுபற்றி அரசுத்தரப்பு தெரிவிக்க வேண்டும்" என்றார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது. கணேசன், "சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என, மற்றொரு மனு செய்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பாலமுருகன் ஆஜரானார். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
நீதிபதி: பணி நியமனத்தில் அரசியல் தலையீடு, முறைகேடு நடந்துள்ளதா? என, விசாரணை அதிகாரி நான்கு வாரங்களுக்குள் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.