Pages

Sunday, September 22, 2013

ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு? பல லட்சம் கையாடல்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கங்களில், பல லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், கிளை வங்கிகள், 140க்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு வங்கிகள் செயல்படுகிறது. இது தவிர, அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் செயல்படுகிறது. 
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தற்போது முடிந்து, நிர்வாகிகள் பதவியேற்றுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக சங்கங்களுக்கான தேர்தல் நடக்கவில்லை. இக்கால கட்டத்தில், தனி அலுவலர், செயலர்களே வங்கிகள், கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களை நிர்வகித்து வந்தனர். அக்கால கட்டத்தில், சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர், பணியாளர் கூட்டுறவு சங்கங்களில்,பல லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 
குறிப்பாக,காரைக்குடி சரகத்தில் உள்ள சில ஆசிரியர்/ பணியாளர் சிக்கன நாணய சங்கங்களில்,கூட்டுறவு விதிகளை மீறி, 2 அல்லது 3 சங்கங்களை,ஒரு தனி அலுவலரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்துள்ளனர். இதன் மூலம், ரூ.40 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதேபோன்று, ஆசிரியர்/ பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில், கடன் பெற்று திரும்ப செலுத்தாத, உறுப்பினர்களுக்கு, மாற்று சங்கத்தில் கடன் கொடுத்துள்ளனர். உறுப்பினர்களிடம் இருந்து பிடித்த செய்த, கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல், அதிகாரிகள் கையாடல் செய்துள்ளதாக,ஆசிரியர்/ பணியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் உமாமகேஸ்வரி கூறுகையில்,"" முறைகேடு புகார் எனக்கு வரவில்லை. அதே நேரம், ஒரு சங்க உறுப்பினருக்கு, மற்ற சங்கத்தில் கடன் தர முடியாது. இது தவறான புகார். உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்த, கடன் பாக்கியை வங்கியில் செலுத்தாத, சங்கங்கள் குறித்து விசாரணை செய்யப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.