Pages

Thursday, September 12, 2013

புது மந்திரிக்கு நாளை "பாலபாடம்': ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

பள்ளி கல்வி துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள பழனியப்பனுக்கு, நாளை (13ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, துறை அதிகாரிகள், "பாலபாடம்' நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளில், அதிகாரிகள், தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

எந்த துறைகளுக்கும் இல்லாத அளவிற்கு, பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில், பள்ளி கல்வித்துறைக்குத் தான் அதிகம். 17 ஆயிரம் கோடி ரூபாய்! அதேபோல், அதிக அமைச்சர்களை பார்த்த துறையிலும், பள்ளி கல்வித்துறைக்குத் தான் முதலிடம். எதற்கும் சளைக்காத அளவிற்கு, சர்ச்சைகளும், பிரச்னைகளும், இந்த துறையில் தான் அதிகம். சி.வி.சண்முகம், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன் ஆகிய, நால்வரைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், பள்ளி கல்வித்துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பதவியை ஏற்றுள்ளார். கடந்த, 5ம் தேதி, வைகை செல்வன் நீக்கப்பட்டு, பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பு தரப்பட்டது. அமைச்சர்கள் வருவதும், போவதுமாக இருப்பதால், துறையில் முக்கியப் பணிகள், முடங்கிப்போய் உள்ளன. டி.பி.ஐ., வளாகத்தில், அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டும் திட்டம், கிடப்பில் உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, அறிவித்து, பல மாதங்களாகி விட்டன. கல்வியாண்டு துவங்கி, தற்போது, காலாண்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை அறிவிக்கவில்லை. இதனால், நடுநிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர், தனியார் பள்ளிகளுக்கு சென்று விட்டனர். இப்படி, பல பிரச்னைகளுக்கு நடுவே, ஒவ்வொருவராக வரும் அமைச்சர்களுக்கு, "பாலபாடம்' எடுப்பதே, அதிகாரிகளுக்கு, முக்கிய வேலையாகி விட்டது. அந்த வரிசையில், துறைக்கு புதிய அமைச்சரான பழனியப்பனுக்கு, நாளை மாலை, 4:00 மணிக்கு, "பாலபாடம்' நடத்த, அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் துறைகள், அந்தந்த துறைகளின் செயல்பாடுகள், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி, விரிவாக, அமைச்சரிடம் விளக்குவதற்கு, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். நாளை மாலை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல்கழக கூட்ட அரங்கில், இந்த கூட்டம் நடக்கிறது. இதற்கு முன்னதாக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, இன்று காலை, 10:30 மணி முதல், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, துறை செயல்பாடுகள் குறித்து, விவாதிக்கிறார். இந்த கூட்டமும், பாடநூல்கழக கூட்ட அரங்கில் நடக்கிறது.
Soure: dinamalar

1 comment:

  1. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு எப்போது வரும்?
    காலாண்டுத் தேர்வும் வந்துவிட்டது. பாவம் மேல்நிலை வகுப்பு மாணவர்கள். வழக்கை காரணம் காட்டி பதவியுயர்வை தள்ளி போடுவது மாணவர்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும். உடனே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு பட்டதாி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    வழக்கின் தன்மையை பொருத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிடத்தை ஒதுக்கி வைத்துவிட்டு உடனே மற்ற ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.