Pages

Monday, September 16, 2013

ஏழை மாணவ, மாணவியர் கல்வியறிவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

"தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தச் மாணவ, மாணவியர் தங்குதடையின்றி கல்வியறிவை பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்துள்ள திருக்காட்டுப்பள்ளியில், சர் சிவசாமி அய்யர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பங்கேற்று, 491 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் மற்றும் 326 பேருக்கு இலவச சைக்கிள், 78 பேருக்கு இலவச பட்டா ஆகியவை வழங்கினார்.

மேலும், 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து, அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:

"நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வறுமையை ஒழிக்கவும் கல்வியால் தான் முடியும். அதனால் தான், கல்வித்துறைக்கு என, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஜெ., ஒதுக்கியுள்ளார். மற்ற மாநிலங்களை விட, கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தடையின்றி கல்வி வெளிச்சத்தை பெறுவதற்காக, கல்வித்துறைக்கு என, சிறப்பு கவனம் செலுத்தி, இலவச காலணி, சீருடை, பாடப்புத்தகங்கள், பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை, லேப்டாப், சைக்கிள் என, எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஜெ., அமல்படுத்தி, வழங்கி வருகிறார்.

இத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் நலயுதவியை பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி, குடும்ப முன்னேற்றத்துக்கு அடித்தளமாக மாணவ, மாணவியர் விளங்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.