Pages

Wednesday, September 11, 2013

வாழ்நாளில் 10 மரங்கள் வளர்க்க முன்னாள் ஜனாதிபதி கலாம் அறிவுரை

ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில், 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை வழங்கினார்.

கோவை, உக்கடம் பெரியகுளம் அருகில், சிறுதுளி அமைப்பின், 10ம் ஆண்டு விழா, பசுமை பஞ்சாயத்து மற்றும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரித்து, காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டங்கள் துவக்க விழா, நேற்று நடந்தது.

திட்டங்களை துவக்கி வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: கோவை உக்கடத்தில் இருந்த, பெரியகுளம், முட்புதர், குப்பை நிறைந்திருந்தது; இன்று, நீர் நிரம்பி, பறவைகள் சுதந்திரமாக உலாவுகின்றன. கூட்டு முயற்சிக்கு, இதுவே சாட்சி.வெளிநாட்டில் வேலை பார்த்த ஒருவர், 10 ஆண்டுகளுக்கு பின், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, தன் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார். கிராமத்தைக் கண்டதும், அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. சிறுவயதில் குளித்து, நீந்தி விளையாடிய, ஊரணியைக் காணவில்லை என்பது புகார்; ஆய்வு செய்த கலெக்டரும் அதிர்ச்சி அடைந்தார். ஊரணியை ஆக்கிரமித்து, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டியிருந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றி, ஊரணியை மீட்டார் கலெக்டர்.

தமிழகத்தில், காணாமல் போன, ஊரணிகளை கண்டுபிடித்து, தூர்வார, அரசுக்கு, பத்திரிகைகள் உதவ வேண்டும். கோவையில், அரசூர், மயிலம்பட்டி கிராமத்தில், பசுமை பஞ்சாயத்து திட்டம் துவங்கியுள்ளதை போன்று, இந்தியாவில், 1,000 கோடி மரங்களை நட்டு வளர்க்கும் திட்டத்தை, இளைஞர்கள், மாணவர்களை வைத்து துவங்கியுள்ளேன். ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில், 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும்.இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.