முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட நிலையில், அதில் ஏராளமான தவறுகள் உள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம், ஜூலை 21ல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை நடத்தியது. கடந்த, 29ம் தேதி, இதற்கான, கீ-ஆன்சர் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பாடத்திற்கான விடைகளில், ஏராளமான தவறுகள் உள்ளன.
வரிசைக் குறியீடு, "டி" வினாத்தாளில், (தமிழ் பாடம்) வினா எண், 53ல், "அடிகள் நீரே அருள்க என்ற கூற்றுக்கு உரியவர்?" என்ற கேள்விக்கு, சரியான விடை, சாத்தனார்; ஆனால், இளங்கோ என, உள்ளது.
வினா எண், 105ல், "தளிர் அடி மென்நகை மயிலைத்தாது அவிழ்தார்க் காளைக்கு" - இவ்வடிகளில் அமைந்துள்ளது என்பதற்கான சரியான விடை, உவமை; ஆனால், அடைமொழி என, உள்ளது.
வினா எண், 126ல், "கட்டளைக் கலித்துறையில் அமைந்த யாப்பு நூல்" என்ற கேள்விக்கு, சரியான விடை, யாப்பருங்கலக் காரிகை; ஆனால், யாப்பருங்கல விருத்தியுரை என, தவறாக உள்ளது.
இது போல, பல விடைகள் தவறுதலாக வெளியிடப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்வு வாரியம் வெளியிட்ட, கீ-ஆன்சரில் தவறு இருந்தால், ஆகஸ்ட 5ம் தேதிக்குள் தெரியப்படுத்தலாம். இதுபோன்ற புகார்களை வைத்து, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்" என்றார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 44 வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. ஆங்கிலம் மற்றும் தமிழில் கேட்கப்பட்ட, ஒரே வினாக்களுக்கு, விடை மாறியிருந்தது. இதுபோன்ற குளறுபடி அரங்கேறிய நிலையில், கீ-ஆன்சர் வெளியிட்டதிலும், தேர்வு வாரியம் தடுமாறி இருப்பது, தேர்வர்களை வெறுப்படையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment