Pages

Thursday, August 29, 2013

காலியிடம் இல்லை என சம்பளம் மறுப்பதா? ஆசிரியருக்கு சம்பளம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

காலியிடம் இல்லை எனக் கூறி, எந்தப் பள்ளியிலும் வேலையில் சேர்க்கப்படாத, இடைநிலை ஆசிரியருக்கு, ஓராண்டுக்கு உரிய, சம்பளப் பாக்கியையும், தொடர்ந்து சம்பளமும் வழங்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கீழ ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர், சூசை மகேஷ். இங்குள்ள, புனித மேரி தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக, 2005ல் நியமிக்கப்பட்டார். இந்தப் பள்ளி, அரசின் நிதி உதவி பெறுகிறது. நிரந்தர பணியிடம் என்பதால், நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து, மாதச் சம்பளம் பெற்று வந்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், இப்பள்ளி மூடப்பட்டு விட்டது. பின், பள்ளிக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம், வாபஸ் பெறப்பட்டது. மனுதாரர் நியமிக்கப்பட்ட பணியிடத்தை, கூடுதல் பணியிடமாக அறிவித்து, சூசைக்கு சம்பளம் வழங்க கல்வித்துறை மறுத்தது.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், சூசை மகேஷ் தாக்கல் செய்த மனுவில், "காலியிடங்கள் உள்ள பள்ளிகளில், என்னை நியமிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரைத்துள்ளார். எந்தப் பள்ளியிலும் சேர, நான் தயாராக உள்ளேன். இதுவரை, பள்ளி கல்வித் துறை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல், சம்பளம் வழங்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: கீழ் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள, பள்ளி மூடப்பட்டதால், செண்பகராமன் புத்தன்துறையில் உள்ள பள்ளியில், மனுதாரர் நியமிக்கப்பட்டார். அந்தப் பள்ளியிலும், காலியிடம் இல்லாததால், அவரை சேர்க்கவில்லை. திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு, கன்னியாகுமரி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, இம்மாதம், 16ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, ஏதாவது ஒரு பள்ளியில், மனுதாரரை சேர்க்கும்படி கோரியுள்ளார். இதற்கிடையில், குமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பள்ளியில் சேர்க்கவும், சம்பளம் வழங்கவும், மனுதாரர் கோரியுள்ளார். எனவே, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல், மனுதாரருக்கு, பள்ளி கல்வித் துறை சம்பளம் வழங்க வேண்டும்.

சம்பளப் பாக்கித் தொகையை, நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அதன்பின், வேறு பள்ளியில் சேரும் வரை, மனுதாரருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் இடைக்கால உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.