ஊதிய உயர்வு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து போராட மீண்டும் டிட்டோ&ஜாக் அமைப்பை உருவாக்க ஆசிரியர் இயக்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழக இடைநிலை ஆசிரியர்கள் 1988ம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்தனர். ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை சம்பளமும், ரூ.4,200 தர ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும், ரூ.2,800 தர ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 21 ஆண்டுகளாக ஒரே மாதிரியான ஊதியம் பெற்று வந்த தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆசிரியர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒரு நபர் குழுவில் தனி ஊதியமாக ரூ.750 அறிவிக்கப்பட்டது. ஆனால் அடிப்படை ஊதியம் மாற்றியமைக்கப்படவில்லை.
மத்திய அரசில் புதிதாக சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியும் சேர்த்து மொத்தம் ரூ.24,300 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசில் புதிதாக சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியும் சேர்த்து மொத்தம் ரூ.15,750 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் புதிதாக சேரும் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,550 வரையும், ஏற்கனவே பணிபுரியும் மூத்த ஆசிரியர்களுக்கு ரூ.15ஆயிரம் வரையும் ஊதிய இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது மூவர் குழு பரிந்துரையிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. இது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழக அரசை எதிர்த்து போராட தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ&ஜாக்) அமைப்பை மீண்டும் உருவாக்க ஆசிரியர் இயக்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி டிட்டோ&ஜாக் பொறுப்பாளர்களின் கூட்டத்தை வருகிற 18ம் தேதி சென்னையில் கூட்டியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்க பொறுப்பாளர்கள் மற்ற ஆசிரியர் இயக்கங்களுக்கு கடிதம் அனுப்பி வருகிறது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான 9300-34800 GP4200 ஐ மட்டுமே ஒரே கோரிக்கையாக வைத்து போராட வேண்டும்.அதை விட்டுவிட்டு பத்தோடு பதினொன்றாக அதிக கோரிக்கைகள் வைத்து தயவு செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிடாதீர்கள்
ReplyDelete